இளைஞர்களுக்கு ஏற்படும் சோர்வும்.. காரணமும்..!
இளம் வயதினர் வாரத்தில் ஏதாவதொரு நாளில் சோர்வாக காட்சி அளிப்பது தவறல்ல. மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ கடினமான செயல்களை செய்யும்போது சோர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் ஒருசிலர் எப்போதும் சோர்வாகவே காணப்படுவார்கள். மதிய வேளையை நெருங்கினால் அவர்களிடத்தில் தூக்கமும் எட்டிப்பார்க்கும். அப்படி எப்போதும் சோர்வுடன் காட்சி அளிப்பது நல்லதல்ல. அது ஒருசில உடல்நல குறைபாடுகளையும் ஏற்படுத்திவிடும். சோர்வு பலவிதங்களில் வெளிப்படும். ஒரு சில அறிகுறிகள் மூலம் எத்தகைய சோர்வு என்பதை கண்டறிந்து போக்கிவிடலாம்.
சிலர் எந்தவொரு விஷயத்தையும் ஈடுபாட்டோடு செய்யும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். தான் பலவீனமாக இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள். உடலில் இரும்பு சத்து குறைவாக இருப்பது இதற்கு காரணமாக அமையும். செல் களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றாலும் உடல் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். பச்சை இலை காய்கறிகள், இறைச்சி வகைகள், பயறு வகைகள், நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், நட்ஸ் வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சோர்வை போக்கிவிடலாம்.
பகலில் சோம்பலாக இருப்பதாக உணர்ந்தால் நிறைய பேர் காபி குடிப்பார்கள். அது உடனடி உற்சாகத்தை தரும். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே அந்த உற்சாக நிலை நீடிக்கும். அதிக அளவு சர்க்கரை கலந்த பானங்களை குடிக்கும்போது அவை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கும். அதனால் உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும். சில நிமிடங்களில் அது குறைந்து மீண்டும் சோர்வு எட்டிப்பார்க்க தொடங்கி விடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரற்று இருப்பது நல்லதல்ல. இதனை தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளியில் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சாப்பிட வேண்டும். நார்ச்சத்து, புரதம் அதிகம் கொண்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடலாம்.
எந்தவித நெருக்கடியும் இன்றி இயல்பாக இருந்தாலும் மனம் நிம்மதியற்று இருக்கும். நாள் முழுவதும் காபின் கலந்த பானங்களை பருகுபவர்களுக்கு இந்த பிரச்சினை எட்டிப்பார்க்கும். காபின் அதிகமாக உட்கொள்ளும்போது அது உடலையும், மனதையும் எதிர்மறையாக பாதிக்கச் செய்யும். அதற்கு பதிலாக மூலிகை டீ வகைகளை பருகி வரலாம்.
கவனச்சிதறல், ஆர்வமின்மை போன்ற காரணங்களாலும் சோர்வு உண்டாகும். அது அன்றாட செயல் பாடுகளை நேரடியாக பாதிக்கும். மூளையின் செயல்பாடும் தடைபடும். அதனால் சோர்வு உண்டாகும். வைட்டமின் பி குறைபாடு அதற்கு காரணமாக இருக்கலாம். மது அருந்துவதாலும் இத்தகைய பாதிப்பு நேரும். புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
காலை உணவை சாப்பிடாமல் நீண்ட நேரம் வெறும் வயிற்றுடன் இருந்தால் வளர்சிதை மாற்றம் பாதிப்படையும். மந்தமான உணர்வு எட்டிப்பார்க்கும். அது சோர்வுக்கு வழிவகுக்கும். முழு தானியங்கள், பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment