பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு உள்ளிட்ட விழாக்களில் கைத்தறி துணிகளால் செய்யப்பட்ட உடைகளை அணியலாம் என்று சொல்லி, கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதியும், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதியும் பல்கலைக்கழக மானியக்குழுவால் (யு.ஜி.சி.) வேண்டுகோள் விடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.
அதன் தொடர்ச்சியாக சில பல்கலைக்கழகங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டன.
இந்த நிலையில் பின்பற்றாத சில பல்கலைக்கழகங்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்து பல்கலைக்கழக மானியக்குழு தற்போது சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மானிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரையை ஏற்று, பல பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே தங்களுடைய ஆண்டு பட்டமளிப்பு விழா உள்ளிட்ட சில நிகழ்வுகளில் கைத்தறி துணிகளால் ஆன உடைகளை பயன்படுத்துகின்றன. இருப்பினும் சில பல்கலைக்கழகங்கள் அதற்கு மாறவில்லை. கைத்தறி துணிகளுக்கு மாறுவதை விழாக்கால உடையாக பல்கலைக்கழகங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
கைத்தறி உடைகளை பயன்படுத்துவதால் இந்தியன் என்ற பெருமையை அடைவதோடு, கிராமப்புறங்களில் வாழும் பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய கைத்தறித் தொழிலையும் ஊக்குவிக்ககூடியதாக இருக்கும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment