தேர்வர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு (முழு விவரம்)
தேர்வர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
சென்னை, ஜன.12-
தேர்வர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவு நேற்று வெளியாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் பணிகளில் வரும் நேர்முகத் தேர்வுடன் கூடிய குரூப்-2 பதவிகளிலும், நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட நேர்முகத் தேர்வு அல்லாத குரூப்-2ஏ பதவிகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கான அறிவிப்பை கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.
அப்போது குரூப்-2 பதவிகளில் 116 இடங்களும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன. அதன்படி, இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டனர். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதினார்கள்.
தாமதம்
முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று அதற்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.
எப்போது தான் தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்? என்ற விரக்தியில், சமூக வலைதளங்களில் தேர்வு முடிவை விரைந்து வெளியிடக் கோரி வைரல் ஆக்கினார்கள். இதையடுத்து தேர்வு முடிவுக்கான தாமதம் ஏன்? என்பதையும், தேர்வு முடிவு ஜனவரி 12-ந்தேதி (இன்று) வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் குரூப்-2, 2ஏ பதவிகளில் சில பணியிடங்கள் சேர்த்தும், சில இடங்களை குறைத்தும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, சமீபத்தில் வெளியான தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு
இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவை முன்கூட்டியே, ஏற்கனவே தெரிவித்திருந்த தேதியில் ஒரு நாளுக்கு முன்பே நேற்று வெளியிட்டு இருக்கிறது. இந்த முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் நேர்முகத் தேர்வுக்கு 483 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது 161 இடங்களுக்கு 483 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி பார்க்கையில் ஒரு இடத்துக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர். தற்போது வெற்றி பெற்றுள்ளவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன விதிகள், நிபந்தனைகள் அடிப்படையில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து அதில் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
குரூப்-2ஏ பதவிகளுக்கு...
இதேபோல், 5 ஆயிரத்து 990 இடங்களுக்கான குரூப்-2ஏ பதவிகளுக்கும் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி, அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து முதன்மைத் தேர்வை எழுதியவர்களில் அடுத்தகட்டமாக கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் யார்? என்ற விவரம் அவர்களின் பதிவெண்ணை பதிவிடும்போது தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 14 ஆயிரத்து 975 பேர் கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து உள்ளது.
குரூப்-2 நேர்முகத் தேர்வு பணிகள் முடிவடைந்த பின்னர், குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நேர்முகச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு முன்னர் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது.
மேலும் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று பட்டியலில் இடம்பெற்றுள்ள 483 பேரில், தேர்வாணையத்தின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகுதிகளை பெற்றிருந்தால், நேர்முகத் தேர்வு அல்லாத குரூப்-2ஏ பதவிகளுக்கும் தகுதியுடையவர்கள் ஆவார்கள் எனவும், நேர்முகத் தேர்வில் பங்குபெற்று அதற்கான கலந்தாய்வில் பதவிகளை தேர்ந்தெடுக்கும் தேர்வர்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment