மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,110 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
பணி நியமன ஆணை
கொரோனாவின்போது தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 977 நர்சுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசியதாவது:-
5,110 பணியிடங்கள்
கொரோனாவின்போது பணிபுரிந்த டாக்டர்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.197 கோடி செலவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவத்துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 1,884 பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 6-ந் தேதி மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து 21 புதிய டாக்டர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
விரைவில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 2,250 கிராம சுகாதார நர்சுகள், 986 மருந்தாளுநர்கள், 1,076 சுகாதார ஆய்வாளர்கள், 798 மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என 5,110 பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் 1,257 மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளன. டாக்டர் மற்றும் நர்சு பணியிட மாற்றங்களுக்கு வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment