அறிவியல் கண்டுபிடிப்பில் ஒரு ஆச்சரியப்படத்தக்க வகையில் பணிகளை செய்வது செயற்கை நுண்ணறிவு. மனிதன் சிந்தித்து செய்வதையெல்லாம் செயற்கை நுண்ணறிவு மூலம் சில விநாடிகளில் செய்துவிட முடிகிறது. மருத்துவமனைகளில் டாக்டர்கள் வழங்கும் பல சிகிச்சைகள் கூட செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் மூலம் செய்யப்படுகிறது. அனைத்து பணிகளிலும் இப்போது செயற்கை நுண்ணறிவு நுழைந்துவிட்டது.
வீடுகளில் கூட செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதன் செய்யும் வேலைகள் பல செய்யப்படுகின்றன. ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யவும், அவர்களின் பயணத்தை திட்டமிடவும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
இதுபோல, பல தொழில் நிறுவனங்கள் இப்போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தொடங்கிவிட்டன. எதிர்காலமே செயற்கை நுண்ணறிவுதான் என்ற வகையில், பல பல்கலைக்கழகங்கள் இப்போது செயற்கை நுண்ணறிவு தொடர்பான பட்டப்படிப்புகளை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா இந்திய இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை காட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இருட்டில் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு பிரகாசமான ஒரு ஒளிவிளக்கை காட்டுவதுபோல இந்த அறிவிப்பு இருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் மைக்ரோசாப்ட் நிறுவனம் 20 லட்சம் இளைஞர்களுக்கு இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்போகும் பல திட்டங்களை அறிவித்துள்ளார்.
மத்திய அரசாங்க திறன் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 மாநிலங்களை பங்குதாரர்களாகக் கொண்டு 100 தொழிற்பயிற்சி நிலையங்களிலும், பயிற்சி மையங்களிலும் 5 லட்சம் மாணவர்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சிகளை அளிக்கப்போகிறது. இந்த 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தையும் சேர்க்க அதன் நிர்வாக அதிகாரி இன்னசென்ட் திவ்யா முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டால், தமிழ்நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், வேலை தேடும் இளைஞர்களும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சி பெற்று உடனடியாக நல்ல நிறுவனங்களில் வேலை தேடிக்கொள்ள முடியும்.
அவர்களுக்கு கடும் கிராக்கியும் இருக்கும்.
இதுமட்டுமல்லாமல், இந்த நிறுவனம் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆயிரம் பயிற்சியாளர்கள் மூலமாக ஒரு லட்சம் இளம் பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களை வழங்க இருக்கிறது. மேலும், அடுத்த தலைமுறையை செயற்கை நுண்ணறிவு ஆற்றல் மிகுந்தவர்களாக மாற்ற தொலைதூர கிராமங்களிலும், மலைவாழ் பகுதிகளிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் 4 லட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் அதுதொடர்பான வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்போகிறது.
இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 3 உலகளாவிய முயற்சிகளான தொழில்நுட்ப கல்வி மற்றும் பள்ளிக்கூடங்களில் கல்வியறிவு, மாணவர்களை விவசாய பண்ணைகளுக்கு அழைத்து செல்லுதல், பள்ளிக்கூடங்களில் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுதல், அதற்கான பயிற்சி உபகரணங்களை ஆசிரியர்களுக்கு வழங்குதல் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் வெற்றியடைய முடியும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கருதுகிறது. இந்த அறிவிப்புகளெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உரியது. தமிழக அரசு உடனடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தொழில்மயமாகிக்கொண்டு இருக்கும் தமிழ்நாட்டுக்கு இதன் பயன்களை பெருமளவில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடவேண்டும். தமிழக பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளிலும் பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment