மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, February 6, 2024

மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

‘மாணவர்களுக்கு புதுப்புது யுக்திகளோடு பாடம் கற்பிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 

 தொழில் நுட்ப படப்பதிவுக் கூடங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கல்வி தொலைக்காட்சி உயர் தொழில் நுட்ப படப்பதிவுக் கூடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர் ஒளிப்பதிவு கூடத்தில் இருந்த கேமராவையும், இயக்கினார். அங்கு புதிதாக திறக்கப்பட்ட சிறிய திரையரங்கில் அமர்ந்து ஒளிப்பதிவு கூடத்தில் இருந்து மாணவர்களுக்கு பாடம் எடுப்பதையும் அமைச்சர் பார்வையிட்டார். 

மாணவர்களுக்கு புது யுக்தி பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களிடம் கூறும்போது, ‘மாணவர்களுக்கான ஒளிப்பதிவு கூடங்கள் மற்றும் அதிநவீன ஆய்வுக்கூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை உலக தரத்தில் கொண்டு வர வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் ஆசையை நிறைவேற்றி உள்ளோம். மாணவர்களுக்கு புதுப்புது யுக்திகளோடு பாடம் கற்பிப்பதற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிட்டோம். அதன் ஒரு பகுதியாக தற்போது ஒளிப்பதிவு கூடங்கள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றால் என்ன? என மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் படக்காட்சிகளை உருவாக்கி உள்ளோம். இதை சொல்லி கொடுத்து படிப்பதைவிட நேரடியாக மாணவர்களின் கற்பனை திறனை அங்கேயே கொண்டு செல்லும் விதமாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை எல்லா பாடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். 1-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கதைகள் சொல்லித் தருவதில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இதைக் கொண்டு செல்ல உள்ளோம். 

ஒவ்வொரு வகுப்பறைக்கும்... மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம், வழிகாட்டுதல் என்றால் பள்ளிக்கல்வித்துறையின் உதவி தொலைபேசி எண்ணான 14417 மூலம் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. பாடம் நடத்துவதில் தொழில்நுட்பம் வருவதன் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் தவிர்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும் எடுத்து செல்லப்பட உள்ளது. டி.பி.ஐ. வளாகம் எப்படி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகமாக மாற்றப்பட்டதோ?, அதேபோல் இங்குள்ள தொழில்நுட்பமும் அடுத்தடுத்த பரிணாமம் பெறும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்து 721 பள்ளிகளில் உள்ள 1 கோடியே 23 லட்சத்து 73 ஆயிரத்து 598 மாணவர்கள் மற்றும் 5 லட்சத்து 32 ஆயிரத்து 909 ஆசிரியர்களும் பயன்பெறுவார்கள்’ என்றார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment