பிரிட்ஜ் பராமரிப்பு தெரிந்துகொள்வோம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, February 6, 2024

பிரிட்ஜ் பராமரிப்பு தெரிந்துகொள்வோம்!

பிரிட்ஜ் பராமரிப்பு தெரிந்துகொள்வோம்! 
கதவை திறந்ததுமே உள்ளே இருக்கிற பொருட்கள் எல்லாம் கீழே விழுற மாதிரி பிரிட்ஜில் (குளிர் சாதன பெட்டி) அனைத்தையும் அடைத்து வைப்பது பலரது வழக்கம். ஆனால், பிரிட்ஜில் எவற்றை வைக்கலாம், எதையெல்லாம் வைக்கக்கூடாது என்ற வரைமுறை உண்டு. சிலர் மீந்து போன உணவுகளை அந்தப் பாத்திரத்தோடு உள்ளே வைத்துவிடுவார்கள். இது தவறு. பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை பிரிட்ஜ் உள்ளே வைப்பதைத் தவிர்க்க வேண்டும். 

தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். உருண்டை வடிவ அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களையோ, டப்பாவையோ வைப்பதை தவிர்க்கலாம். அவை பிரிட்ஜ் உள்ளே சரியாக உட்காராமல் கம்ப்ரசரின் அதிர்வுக்கு ஏற்ப அதிர்ந்து, தேவையில்லாத சத்தத்தை ஏற்படுத்தக்கூடும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இறுகக்கட்டி வைப்பதால் உள்ளே ஆவியடித்து அழுகிவிடக்கூடும். இதைத் தவிர்க்க அவற்றை ‘நெட் பேக்' எனப்படும் வலைப்பின்னல் பைகளில் போட்டு வைக்கலாம். கறிவேப்பிலை, கீரை, பூ போன்றவற்றை காய்கறிக்கான பகுதியில் வைக்காமல் பிரிட்ஜ் கதவில் இருக்கும் அறைகளில் வைக்கலாம். சூடான பொருட்களை பிரிட்ஜ் உள்ளே வைக்கக்கூடாது. 

அவற்றின் வெப்பநிலை ப்ரிட்ஜ் முழுவதும் பரவி, அங்கிருக்கும் வெப்பநிலையை அதிகரித்துவிடும். இதனால் மின் செலவு அதிகரிப்பதுடன், ஏற்கனவே குளிர்நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அவை கெட்டுப் போகவும்கூடும். பிரிட்ஜ் கதவை அடிக்கடி திறப்பதை தவிர்க்க வேண்டும். அவசியம் எனில் கொஞ்சமாகத் திறந்து உடனே மூட வேண்டும். சிலர் வீட்டுக்கதவு போல பிரிட்ஜை திறந்து வைத்துவிட்டு பொறுமையாக அதன் உள்ளே பொருட்களை வைப்பார்கள், எடுப்பார்கள். பிரிட்ஜை சமையலறையில் வைக்கக்கூடாது. பொதுவாகவே மற்ற அறைகளைவிட சமையல் அறையின் வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும். அங்கே வைப்பதால் பிரிட்ஜ் உள்ளே குளிர்ச்சி குறையலாம். சிலர் பிரிட்ஜில் அவ்வளவாகப் பொருட்கள் இல்லை என்று அடிக்கடி அணைத்து வைத்துவிடுவார்கள். 

இது தவறு. என்னதான் 6 அல்லது 8 மணி நேரம் வரை பிரிட்ஜை அணைத்து வைத்திருந்தாலும் மீண்டும் ஆன் செய்யும்போது பிரிட்ஜ் முதலில் இருந்து வேலைசெய்ய ஆரம்பிக்கும். இதனால் மின்செலவு அதிகரிக்கும். வெயில் காலம், குளிர்காலம் என தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற மாதிரி பிரிட்ஜின் குளிர்ச்சியை மாற்ற வேண்டும். பிரிட்ஜ் வடிவமைக்கும்போதே இன்பில்ட் ஸ்டெபிலைசர் அமைத்திருந்தாலும், அது மின்சாரத்தின் ஏற்ற, இறக்கத்தை அத்தனை பக்குவமாகச் சமாளிக்காது. 

அதனால் தரமான ஸ்டெபிலைசர் பொருத்துவது நல்லது. ஒவ்வொரு மாதமும் பிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சிறிது சமையல் சோடா, எலுமிச்சைச்சாறு அல்லது வினிகர் கலந்து மென்மையான துணியால் பிரிட்ஜின் உள்பாகங்களை துடைக்க வேண்டும். சோப்பை தவிர்க்க வேண்டும். அது பிரிட்ஜினுள் தேவையில்லாத மணத்தை ஏற்படுத்துவதுடன் மென்மையான பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். வெளிப்பாகத்தை காரத்தன்மை குறைந்த குளியல் சோப்பு அல்லது ஷாம்பு கலந்த நீரில் துடைக்கலாம். பிரிட்ஜின் கேஸ்கட்டையும் நன்றாக துடைத்து பராமரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment