அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் : முதல்-அமைச்சர் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, February 19, 2024

அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் : முதல்-அமைச்சர்

அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 


அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

புதுமைப்பெண் திட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:- சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் இவ்வரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். 

 * சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும். 

 * அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளை, ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் சேர்ப்பது குறித்த ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். * கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்த ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். 

  வழிபாட்டுத்தலம் அனுமதி 

 * வழிபாட்டுத்தலங்களுக்கு முறையான அனுமதி பெறுவதிலும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதிலும் இருக்கும் இடர்பாடுகளை களைந்து, ஒரு நிலையான இயக்க நடைமுறை விரைவில் வெளியிடப்படும். 

 * அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வயதுவரம்பு அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த ஆணையிட்டு உள்ளேன். 

 * சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில் யு.ஜி.சி. மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் நியமன அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும். 

 * வக்பு வாரியத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அங்கு 27 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படும். 

  கல்விக்கடன்

* ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மக்கள், இஸ்லாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி, அதுவும் விரைவில் கிடைக்கும். 

 * மேலும் 11 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன்விடுதலை கோப்புகள், கவர்னரின் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. 

 * தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள், இனிமேல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும்.

 * வக்பு நிலங்களை கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக, 30 ஆண்டு நீண்ட கால குத்தகைக்கு வழங்க ஆய்வு செய்து, அரசு விரைவில் அனுமதி வழங்கும். 

 * வக்பு சொத்துக்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்ய மதுரையில் தீர்ப்பாயம் அமைக்க ஐகோட்டின் ஒப்புதல் பெறப்படும். 

 * சிறுபான்மையின மக்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை மத்திய அரசு 2022-2023-ம் ஆண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு நிறுத்திவிட்டது. இதை மீண்டும் வழங்கும்படி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த கல்வி உதவித்தொகையை 1 முதல் 8-ம் வகுப்புவரை அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்பு வாரியம் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 256 முஸ்லிம் மாணவிகள் பயன்பெறுவார்கள். 

  ஓரியண்டல் மொழித்தேர்வு 

 * உருது, அராபிக் மற்றும் இதர ஓரியண்டல் மொழித் தேர்வுகளுக்கான கட்டணத்தை சென்னை பல்கலைக்கழகம் ரூ.540-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தியது. இந்தக் கல்வியாண்டில் ரூ.540-ஐ மட்டுமே மாணவர்களிடமிருந்து பெற வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகத்திற்கு அறிவுரைகள் வழங்கப்படும். 

 * ஓரியண்டல் மொழித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, இந்த மாதம் 29-ந் தேதிவரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

 * சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் அரபிக் பாடத்திட்டம், குறைவான மாணவர் சேர்க்கையால் இந்த ஆண்டு கைவிடப்பட்டது. அடுத்த கல்வியாண்டு முதல், இப்பாடத்திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். 

 * முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்த 2-ம் மனைவி மற்றும் அவரது வாரிசுகளுக்கு, கணவர் இறப்புக்கு பின்னால் வாரிசு சான்றிதழ் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அனைத்து உத்தரவுகளும் உடனடியாக செயல்படுத்தப்படும். நல்லாட்சியின் இலக்கணப்படி, சிறுபான்மை மக்கள் அச்சமற்று வாழும் அமைதிச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment