டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அடுத்த ஆண்டு முதல் என்.சி.சி. மாணவர்கள் விமானத்தில் செல்வார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
என்.சி.சி. மாணவர்களுக்கு வாழ்த்து
டெல்லியில் கடந்த மாதம் 26-ந் தேதி நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக முதல்-அமைச்சரின் அணிவகுப்பில் பங்கேற்ற என்.சி.சி. பிரிவினர், ஒட்டுமொத்த பிரிவில் 3-வது இடம் பிடித்து அசத்தினர்.
இந்தநிலையில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்று அசத்திய என்.சி.சி. பிரிவினரை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், என்.சி.சி. பிரிவில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவ-மாணவிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயங்களையும் வழங்கி அவர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தென் பிராந்திய ராணுவ தளபதி கரம் வீர் சிங் பரார், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விமானத்தில் பயணம்
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
குடியரசு தின விழா அணிவகுப்பில் 3-ம் இடம் பிடித்து அசத்தியுள்ள என்.சி.சி. பிரிவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகள் விமானத்தில் அழைத்து செல்லப்படுவார்கள் என்று கூறியிருந்தேன்.
இந்தாண்டு தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மாணவ-மாணவிகள் ரெயிலில் செல்ல வேண்டியதாகி விட்டது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் மாணவ-மாணவிகள் அனைவரும் விமானத்தில் டெல்லி செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தில் அரசுக்கு துணையாக என்.சி.சி. பிரிவினர் மீட்பு பணிகளில் பணியாற்றியதை மறக்க முடியாது. தொடர்ந்து உங்களது மக்கள் சேவை தொடரட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment