பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்து தகுதியுள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த விவரங்களை கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டு இருந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் வரும் இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணி நியமனம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை அரசாணையாக வெளியிட்டப்பட்டு இருக்கிறது.
அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனம் செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி நிலவரப்படி உள்ள உபரி பணியிடங்களை கண்டறிந்து, மே மாதம் 1-ந்தேதிக்குள் கணக்கீடு செய்ய வேண்டும்.
அவ்வாறு கண்டறியப்படும் பணியிடங்களில் தேவை உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மே மாதம் 31-ந்தேதிக்குள் பணி நிரவல் செய்ய வேண்டும். அதன்பின்னர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் நடத்தப்பட வேண்டும்.
நிரப்பப்பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய குழு மற்றும் அதன் நிதித்துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்த பின்னர் அதற்கான அறிவிப்பை அக்டோபர்31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும்.
காலி பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வை நடத்த வேண்டும். அதற்கான தேர்வு முடிவை ஏப்ரல்30-ந்தேதிக்குள் வெளியிட்டு, மே மாதம் 1-ந்தேதி முதல்31-ந்தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டு விட வேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق