Read this also 👉ஆசிரியர் வீட்டுக்கும், பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம்? பள்ளிக்கல்வித் துறை விவரங்களை சேகரிக்கிறது - Click here
ஆசிரியர்களின் அனுபவத்துக்கு எந்த தொழில்நுட்பமும் ஈடாகாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பள்ளி பாடங்களை 2டி, 3டி வடிவில் வீடியோவாக பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதள வடிவிலான மணற்கேணி செயலியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெ.குமரகுருபரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இணையதள வடிவிலான மணற்கேணி செயலியை தொடங்கி வைத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
ஈடாகாது
தொழில்நுட்பத்தின் தாக்கம் ஆசிரியர்கள்-மாணவர்களின் பங்களிப்பை எப்படி மாற்றி இருக்கிறது? என்பதை நாம் பார்க்கிறோம். தொழில்நுட்பம் என்னதான் வந்தாலும், ஒரு வகுப்பறையில் ஆசிரியர் நின்று கொண்டு பாடம் நடத்தும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது.
ஆசிரியர்களுக்கு நிகராக எதனையும் சொல்ல மாட்டோம். மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த அனைத்து தேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இதை செய்கிறோம். பள்ளிக்கல்வித்துறை ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது என்றால், அது அனைவருக்குமானதுதான்.
அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். சட்டசபை வரலாற்றில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. இதை பார்த்து அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வருவார்கள். அதேநேரத்தில் எங்கள் கடமையையும் நாங்கள் செய்வோம்.
பள்ளி வளாகங்களில் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு வசதியாக குடிநீர், சாமியானா பந்தல் போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை
இதனைத்தொடர்ந்து, ‘இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்களே?' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘நிதிநிலைமை சீரடைந்த பிறகு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். கேட்காமலேயே செய்யக்கூடிய முதல்-அமைச்சர் இதையும் செய்வார். இதுவரை இடைநிலை ஆசிரியர்களிடம் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். உரிமையோடு உங்களிடம்தான் கேட்க முடியும் என்று கேட்கிறார்கள். அந்த உரிமைக்கு நாங்கள் எப்போதும் மரியாதை கொடுப்போம்' என்றார்.
ஆசிரியர்களுக்கான துணைக்கருவி ‘மணற்கேணி’
பள்ளிக்கல்வித் துறையால் இணையதள வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள மணற்கேணி செயலி ஆசிரியர்களுக்கு துணைக் கருவியாக பயன்படக்கூடிய ஒன்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள பாடங்களை மாணவர்களுக்கு வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட்போர்டு வாயிலாக திரையிட்டு காட்டி ஆசிரியர்கள் பாடங்களை நடத்த முடியும்.
காட்சிரீதியாக பாடங்கள் இருப்பதால் மாணவர்களுக்கு கற்றல் மேலும் எளிதாகும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த மணற்கேணி இணையதளத்தில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை பல பாடப்பொருட்களாக, வகுப்புகள் தாண்டி வகைப்பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு காணொலி முடிவிலும் வினாடி-வினா வாயிலாக மாணவர்களின் புரிதல் திறனையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர், அதிகாரிகள்.
மேலும் போட்டித் தேர்வுகளுக்கும் இந்த செயலி உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://manarkeni.tnschools.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று இந்த மணற்கேணி செயலியை பார்க்கலாம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق