அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் 15 ஆயிரம் பேருக்கு முதல்கட்டமாக கையடக்க கணினிகளை வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு கல்வித்துறை அனுப்பிவைத்திருக்கிறது.
கையடக்க கணினிகள்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், கற்றல்-கற்பித்தலுக்கான உபகரணங்களை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து மாணவ-மாணவிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாறி வரும் கற்றல்-கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி (டேப்) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த கையடக்க கணினி வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் முதல்கட்டமாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 796 ஆசிரியர்களுக்கு இந்த கையடக்க கணினி வழங்க அந்தந்த மாவட்ட கல்வி அலுவலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போர்டுகள்
அவ்வாறு பெறப்படும் கையடக்க கணினிகளை மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வைத்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும், கண்காணிப்பு கேமராக்களை அந்த அறையில் பொருத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் அங்கு பாதுகாப்புக்காக இருக்கும் போலீசாரிடம் இருந்து பாதுகாப்பு குறித்த தகவலை தினமும் பெற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதில் எந்த சுணக்கமோ அல்லது கவனக்குறைவான செயல்பாடோ இருக்கக்கூடாது எனவும் தெரிவித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 625 ஆசிரியர்களுக்கும், 3-ம் கட்டமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 711 ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினி அனுப்பிவைக்கப்பட உள்ளது.
இதேபோல், உயர்தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் அதற்கான சாதனங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளுக்கான ஸ்மார்ட் போர்டுகளும் வருகிற 1-ந் தேதி முதல் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கின்றன.
No comments:
Post a Comment