அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும், நடப்பு நிதியாண்டிலிருந்து, சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற படைவீரர் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வீட்டு வரித் தொகையை மீண்டும் பெறும் சலுகை வழங்கப்படுகிறது.
வரும் நிதியாண்டிலிருந்து, குடியிருப்புகள், சொத்து வரி, வீட்டு வரித் தொகையை மீளப்பெறும் திட்டத்தை, அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்து வழங்க ஆவன செய்யப்படும் என, 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழக அரசு அறிவித்தது.
தற்போதுள்ள திட்டத்தின்படி, ஆண்டுக்கு அதிகபட்சமாக 10,000 ரூபாய் அல்லது செலுத்தப்பட்ட அசல் வரித்தொகை ஆகியவற்றில் எது குறைந்ததோ, அத்தொகை வழங்கப்படுகிறது.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 103 பேருக்கு 2.49 லட்சம் ரூபாய், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து திருப்பி வழங்கப்பட்டது.
பட்ஜெட்டில் அறிவித்தபடி, சொத்துவரி, வீட்டு வரி மீளப்பெறும் திட்டத்தை, அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்து, அரசாணை வெளியிடும்படி, முன்னாள் படைவீரர் நல இயக்கக இயக்குனர், அரசுக்கு பரிந்துரை செய்தார்.
சில நிபந்தனைகளுடன் நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிபந்தனைகள்:
முன்னாள் படைவீரர், தமிழகத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்
முன்னாள் படைவீரர்களின் சொந்த வீட்டிற்கு, அவர்களின் சொந்த பயன்பாட்டின் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டடத்திற்கு மட்டும், இச்சலுகை வழங்கப்படும்
முன்னாள் படைவீரர், வருமான வரி செலுத்துபவராக இருத்தல் கூடாது
ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், மறு வேலைவாய்ப்பு முறையில், மத்திய மாநில அரசு பணிகள், பொதுத்துறை நிறுவனப் பணிகளில் உள்ளோர், மறு வேலைவாய்ப்பு பணியில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களாக இருத்தல் கூடாது.
இதற்கான அரசாணையை, பொதுத்துறை செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment