அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் அரசாணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, March 16, 2024

அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் அரசாணை வெளியீடு

அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அறிவிப்பு 

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-25-ம் ஆண்டு பட்ஜெட் உரையில், ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.370 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என்று அறிவித்தார். 

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சமூகநலத்துறை கமிஷனர் தமிழக அரசுக்கு கருத்துருக்களை அனுப்பினார். அதில், ‘புதுமைப்பெண் திட்டத்தால் தற்போது, 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்தால், உயர்கல்வி பயிலும் மாணவிகளின் சதவீதம் அதிகரிக்கும். தற்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 49 ஆயிரத்து 664 மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதில், சிறுபான்மையினர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 23 ஆயிரத்து 560 மாணவிகளும் அடங்குவர். 

 அரசாணை 

புதுமைப்பெண் திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிப்பதற்கு கூடுதலாக ரூ.35.37 கோடி ஒதுக்க வேண்டும்' என்று கருத்துரு வழங்கினார். தமிழக அரசு இந்த கருத்துருவை கவனமாக பரிசீலனை செய்து, ‘அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவிகளுக்கு, புதுமைப்பெண் திட்டம் நீட்டிக்கப்படுகிறது' என்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment