முக்கியத்துவம் பெறும் வேளாண் படிப்புகள்
வேலைவாய்ப்புக்கும் வளமான எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்கும் பல படிப்புகள் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு முன் வரிசைகட்டி நிற்கின்றன. அந்தப்படிப்புகளில் முக்கியமானவை வேளாண் படிப்புகள்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் இயற்கையோடு இணைந்து வாழும் போக்கு அதிகரித்திருக்கும் சூழலில் வேளாண் படிப்புகள் இன்று சிறந்த தேர்வாக மாறி இருக்கின்றன. வேளாண் படிப்புகள் தனி ஒருவரின் மேன்மைக்கு மட்டுமல்ல;
ஒட்டுமொத்த உலகின் மேன்மைக்கும் உறுதியளிக்கும் வல்லமை கொண்டவை. மேலும், மனித இனம் இந்தப் பூமியில் வாழும்வரை, உணவு சார்ந்த படிப்பும் தொழிலும் நிலைத்திருக்கும் என்பதால், வேளாண் படிப்புகளை கற்பதன் பயன் ஒருபோதும் நீர்த்துப் போகாது.
12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை படித்தவர்கள் வேளாண் படிப்பில் சேர முடியும்.
இருப்பினும், அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி, புட் டெக்னாலஜி போன்ற படிப்புகளில், கணிதம், கணினி அறிவியல் பாடங்களைப் படித்தவர்களும் சேர முடியும்.
வேளாண் படிப்பில் சேர்வதற்கு டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுதலாம். அல்லது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.
நுழைவுத் தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால், இந்தியாவில் உள்ள சிறந்த வேளாண் கல்லூரிகளில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக 14 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளே. இவைதவிர, 29 சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன.
வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பவியலாளர், கள ஆய்வாளர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் நுகர்பொருள் கிடங்கு அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுனர், வேளாண் நிர்வாக அதிகாரி எனப் பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்ல முடியும். அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
No comments:
Post a Comment