உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கக்கூடிய தொலைதூர, ஆன்லைன் வழிக்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேரும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை
தொலைதூர மற்றும் ஆன்லைன் வழிக் கல்வி படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு முன்பு என்ன மாதிரியான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக மாணவ-மாணவிகள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
எந்தெந்த உயர்கல்வித் துறைகளில் தொலைதூர மற்றும் ஆன்லைன் வழிக் கல்வி படிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பல்கலைக்கழக மானியக்குழு விளக்கமாக தெரிவித்துள்ளது.
அதன்படி, திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல், ஆன்லைன் கல்விக்கான சேர்க்கையை உயர்கல்வி நிறுவனங்கள் வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன்லைன் முறையில் இளங்கலை, முதுகலை பட்டங்களை வழங்குவதற்கும், 2 ஆண்டு கால முதுநிலை டிப்ளமோ படிப்புக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருக்கிறது.
அனுமதி இல்லை
அந்தவகையில் தொலைதூர கற்றல் மற்றும் ஆன்லைன் வழிக் கல்வியை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகார நிலையை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல், திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல், ஆன்லைன் வழிக் கல்வி வழங்க அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் விவரங்கள் https://deb.ugc.ac.in/ என்ற பல்கலைக்கழக மானியக்குழு இணையதளத்தில் கிடைக்கிறது.
மேலும் என்ஜினீயரிங், மருத்துவம், பிசியோதெரபி, பார்மசி, நர்சிங், பல் மருத்துவம், கட்டிடக்கலை, சட்டம், விவசாயம், தோட்டக்கலை, ஓட்டல் மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், சமையல் அறிவியல், விமான பராமரிப்பு, காட்சிக்கலை மற்றும் விளையாட்டு, விமானம் ஆகிய உயர்கல்வி துறைகளில் திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி, ஆன்லைன் வழிக்கல்வியை வழங்க ஒழுங்குமுறை அமைப்புக்கோ, கவுன்சிலுக்கோ அனுமதி இல்லை. அதேபோல், அனைத்து துறைகளில் முனைவர், ஆராய்ச்சி படிப்பை திறந்த மற்றும் தொலைதூர கற்றல், ஆன்லைன் வழிகல்வி முறையில் பெறவும் தடை செய்யப்பட்டுள்ளன என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment