குழந்தைகளின்... மூளையை பாதிக்கும் ‘ஸ்மார்ட்போன்’ பழக்கம் | Children's... 'Smartphone' habit affecting the brain - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, March 23, 2024

குழந்தைகளின்... மூளையை பாதிக்கும் ‘ஸ்மார்ட்போன்’ பழக்கம் | Children's... 'Smartphone' habit affecting the brain

குழந்தைகளின்... மூளையை பாதிக்கும் ‘ஸ்மார்ட்போன்’ பழக்கம் | Children's... 'Smartphone' habit affecting the brain 

கடந்த சில வாரங்களாக குழந்தைகளின் மூளைத்திறன் மற்றும் நினைவாற்றல் வளர்ப்பு பயிற்சிகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். அந்த வரிசையில், இந்த வாரம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் குழந்தைகளின் மூளைத்திறனும், நினைவாற்றலும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, அந்த பாதிப்பை எப்படி குறைப்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்வோம். குறும்பு தனம் நிறைந்த குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைக்க, சாப்பாட்டை எளிதாக ஊட்ட... என குழந்தை வளர்ப்பில் இந்த காலத்து பெற்றோர் கையில் எடுத்திருக்கும் ஆபத்தான விளையாட்டு பொருள்தான், ஸ்மார்ட்போன். வசதியில்லாதவர்கள், வசதியானவர்கள் என்ற எந்தவித பாரபட்சமின்றி, வயது வித்தியாசமின்றி எல்லா குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ்கிறது. ‘பேபி ரைம்ஸ்’ என்ற பெயரில், குழந்தைகளின் மூளைக்குள் ஊடுருவி, ‘யூ-டியூப் ஷார்ட்ஸ்’, ‘பேஸ்புக் ரீல்ஸ்’ பார்க்கும் அளவிற்கு, குழந்தைகளின் மூளையை ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன. 

குழந்தைகள், ஸ்மார்ட்போன் பார்ப்பது தவறில்லை, என்றாலும் அது கட்டுப்பாடோடு நடைபெற வேண்டும். இல்லையேல், குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். பொதுவாக பிறந்தது முதல் 5 வயது வரை யிலான காலகட்டத்தில்தான், மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கும்போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும். ‘ஸ்மார்ட்போன்’ என்ற வட்டத்திற்குள்ளாகவே, வாழ அவர்களது மூளை பழக்கப்பட்டுவிடும். 2 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு, ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 5 வயது குழந்தைகள், கல்விக்காக ஒரு மணிநேரம் மட்டும் பயன்படுத்தலாம். 

அதுவும், வீடியோக்களை அவர்கள் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மாறாக ரைம்ஸ் பாடல்களை கேட்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டும், அதுவும் கல்விக்கு உதவும் வகையிலான விஷயங்களை தெரிந்துகொள்ள அனுமதிக்கலாம். இதுதான், கட்டுப்பாடான ‘ஸ்கிரீனிங்’ நேரம். கட்டுப்பாடுகள் மீறப்படும்போது, குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கடந்த 8 ஆண்டுகளில், நிறைய குழந்தைகள் ‘ஸ்பீச் தெரபி’ எனப்படும், பேச்சுப்பயிற்சிக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்மார்ட்போன்கள் மிகமுக்கிய காரணம் எனலாம். 

ஆம்...! 8 மாதம் தொடங்கி, 2 வயதிற்குள்தான் குழந்தைகள் பேச கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் பேசுவதை உள்வாங்கி, அதற்கு பதில் பேசி பழகவும், மற்றவர்களின் கேள்விக்கு யோசித்து பதில் கொடுக்கவும் அந்த வயதில்தான் பழகுவார்கள். அந்த காலகட்டத்தில், ஸ்மார்ட்போனுக்குள் குழந்தைகள் மூழ்கும்போது பேச்சுப்பயிற்சி, பதில் பேசும் திறன்... என எல்லாமே தடைப்படும். வழக்கமான குழந்தைகளில் இருந்து வேறுபட்டு, சிறப்பு குழந்தைகளை போல செயல்பட ஆரம்பிப்பார்கள். அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல், பதில் பேச தெரியாமல் தவிப்பார்கள். அதேபோல, ‘காக்னெட்டிவ் டெவலெப்மெண்ட்’ எனப்படும் அறிவாற் றல் வளர்ச்சியும் தடைப்பட்டு, குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடும். மேலும் சமூகத் துடன் சேர்ந்து வாழ, தயக்கம் காட்டுவார்கள். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பிஞ்சு குழந்தைகளின் கண்களை வெகுவாக பாதிக்கும். 

கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவக திறனைப் பாதிப்பதால், குழந்தைகளுக்கு கவனச்சிதறல் உண்டாகும். எதிலும் முழு கவனமின்றி, மிகவும் குழப்பமாகவே காணப்படுவார்கள். இதுமட்டுமல்ல, அவர்களது தூக்கம், உணவு முறை, உடல் பருமன் என பல்வேறு பிரச்சினைகளை ஸ்மார்ட்போன் உண்டாக்கும். கட்டுரையாளர்: திரேசா, எம்.எஸ்சி.சைக்காலஜி, மூளைத்திறன் மற்றும் நினைவாற்றல் பயிற்சியாளர், சென்னை. 
  

தவிர்ப்பது எப்படி? ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். ரைம்ஸ், பள்ளிக்கூட பாடங் களைத் தவிர்த்து பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள். நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம், நடனம்... போன்ற பயிற்சிகளில், அவர்களை பிசியாக்குங்கள். குடும்பமாக விளையாடுவது, பூங்கா-கடற்கரைக்கு அழைத்துச் செல்வது... என குடும்பமாக நேரம் செலவழியுங்கள்.

முன்மாதிரி காமன் சென்ஸ் மீடியா என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில், ஸ்மார்ட்போனுக்கு 50 சதவித இளையோர்களும் (13-18 வயது), 36 சதவித பெரியவர்களும் (18-24 வயது) அடிமையாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், பெற்றோர் குழந்தைகள் முன்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையும், வீடியோக்கள் பார்ப்பதையும், விளையாடுவதையும் குறைத்து கொண்டு, முன்மாதிரியாக நடந்து கொள்வது அவசியம்.

நல்ல தூக்கம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் தூங்கச் சிரமப்படுவார்கள். ஸ்மார்ட்போன் திரை வெளிச்சம், அவர்களது மூளையில் பகல் நேர மாயத்தோற்றத்தை உண்டாக்கி, தூக்க ஹார்மோன்களை பாதித்துவிடும். இதனால் தூங்கச் சிரமப்படுவார்கள். அதேசமயம், சிறுகுழந்தைகள் இரவில் கட்டாயம் 10 மணிநேரமாவது தூங்க வேண்டியது அவசியம். அதுவும் எந்தவித தொந்தரவும் இன்றி, 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் அவசியமாகிறது. அப்போதுதான், அவர்களது மூளைக்கு ஓய்வு கிடைக்கும். மூளைத்திறனும் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment