ஹெல்மெட் தரும் நன்மைகள் தெரிந்துகொள்வோம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, April 2, 2024

ஹெல்மெட் தரும் நன்மைகள் தெரிந்துகொள்வோம்!

ஹெல்மெட் தரும் நன்மைகள் 


ஹெல்மெட் அணிவது தொடர்பாக நம்மிடையே சில மூடநம்பிக்கைகள் உள்ளன. ஹெல்மெட் அணியாதபோது 180 டிகிரி அளவிலும் ஹெல்மெட் அணிந்திருக்கும்போது 210 டிகிரி அளவுக்கும் சுற்றி பார்க்க முடியும் என்கின்றன, ஆய்வுகள். ஆகவே, ஹெல்மெட் அணிவதால் பார்வை மறைக்கப்படுவதில்லை. முழுவதும் முகத்தை மூடியிருக்கும் சில ஹெல்மெட்களில் வேண்டுமானால் பார்வை மறைக்கப்படலாம். ஆனால், அதை அணிபவர்கள் எண்ணிக்கை குறைவு. ஹெல்மெட் அணிவதால் போக்குவரத்து ஓசைகளைகேட்க இயலாது என்பதும் உண்மையல்ல. காற்றின் இரைச்சலை தடுத்து, கேட்கும் திறனை பாதுகாப்பதில் ஹெல்மெட்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. சுமார் 100 கி.மீ. அளவிலான வேகத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் செவிப்பறைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே புற ஓசைகளை பெருமளவில் குறைத்து செவிப்பறையை ஹெல்மெட் பாதுகாக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான போக்குவரத்து ஓசைகளைத் தெளிவாகக் கேட்கவும் வைக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளும், ஹெல்மெட் அணிந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தேவையான ஓசையைக் கேட்க இயலும் என்பதையே நிரூபித்துள்ளன. ஹெல்மெட் அணிவதால் தலை சூடாகும் என்பதிலும் உண்மை இல்லை. ஹெல்மெட்டின் உள்புறத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் மென்மையான பஞ்சு போன்ற பகுதி புற வெப்பத்தை உள்ளுக்குள் கடத்தாமல் பார்த்துக்கொள்கிறது. அதிகபட்சம் ஓரிரு டிகிரிகள் வெப்பநிலை வேண்டுமானால் உயரக்கூடும். நாம் நினைக்கும் அளவுக்கு அதிகப்படியான வெப்பநிலை உயர வாய்ப்பில்லை. மிகக்குறைந்த வேகத்தில் செல்லும்போது காற்று வரத்து குறைவாக இருக்கும் என்பதால், சிறிது வெப்பநிலை உயரலாம். ஹெல்மெட் அணியாதவர்களைவிடக் குறைந்த அளவிலான விபத்துகளையே ஹெல்மெட் அணிபவர்கள் எதிர்கொள்கிறார்கள் எனவும் ஆய்வுகள் சொல்கின்றன. வெள்ளை, அடர் வண்ணங்களிலான ஹெல்மெட்டுகளில் பெரும்பாலானவை வெளிச்சம் குறைந்த சமயத்திலும் ஒளியை நன்கு பிரதிபலிக்கின்றன. எனவே, ஹெல்மெட் அணிந்திருப்பவர்களை எளிதில் மற்றவர்கள் பார்க்க முடியும். பெரும்பாலான இருசக்கர வாகன விபத்துகளில் தலையில் அடிபடுவதாலேயே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உயிரிழப்புகளையோ தலையில் அடிபடுவதையோ 30 சதவீதத்துக்கும் மேல் ெஹல்மெட் தடுத்துவிடும். விபத்து ஏதேனும் ஏற்பட்டால் ஹெல்மெட் அணிந்தவரைவிட அணியாதவருக்கு 3-ல் இருந்து 4 மடங்கு அதிக மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றையெல்லாம் கூறுவது, பயமுறுத்துவதற்காக அல்ல; மாறாக ஹெல்மெட் நமக்கு தரும் நன்மைகளை சுட்டிக்காட்டத்தான்.

No comments:

Post a Comment