கோடை விடுமுறை எப்போது தொடங்கும்? தேர்வு அட்டவணை மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பத்துக்கு அதிகாரிகள் விளக்கம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, April 4, 2024

கோடை விடுமுறை எப்போது தொடங்கும்? தேர்வு அட்டவணை மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பத்துக்கு அதிகாரிகள் விளக்கம்

கோடை விடுமுறை எப்போது தொடங்கும்? தேர்வு அட்டவணை மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பத்துக்கு அதிகாரிகள் விளக்கம் 
ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை மாற்றத்தால் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோடை விடுமுறை எப்போது தொடங்கும் என்ற குழப்பத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த குழப்பத்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 
  

ஆண்டு இறுதித்தேர்வு பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 8-ந் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து அதற்கேற்றாற்போல் அட்டவணையையும் வெளியிட்டது. 2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாகவும், 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாகவும் அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

கோடை விடுமுறை எப்போது? இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 10 மற்றும் 12-ந் தேதிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட இருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளை முறையே வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கோடை விடுமுறை எப்போது தொடங்கும்? அதுமட்டுமல்லாமல், தேர்வு தேதி மாற்றப்பட்ட நாட்களில் அதாவது, 10 மற்றும் 12-ந் தேதிகளில் வகுப்புக்கு வர வேண்டுமா? 12-ந் தேதியில் இருந்து 22-ந் தேதி வரையிலான இடைப்பட்ட நாட்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டுமா? என்ற குழப்பத்தில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் இருந்து வருகின்றனர். 

அதிகாரிகள் விளக்கம் இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘10 மற்றும் 12-ந் தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் மட்டுமே 22 மற்றும் 23-ந் தேதிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளது. எனவே 10 மற்றும் 12-ந் தேதிகளில் வகுப்பு நடைபெறும். அதன்பின்னர், 22 மற்றும் 23-ந் தேதி நடைபெறும் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வந்தால் போதும். 

இடைப்பட்ட நாட்கள் ஏற்கனவே வெளியிட்டு இருந்த அறிவிப்புபடி கோடை விடுமுறை கணக்கில்தான் வரும். ஆசிரியர்களை பொறுத்தவரையில், இடைப்பட்ட இந்த நாட்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும் அவர்களுக்கு 26-ந் தேதி வரை வேலை நாட்கள் இருக்கிறது' என்றனர். 10 மற்றும் 12-ந் தேதிகளில் தேர்வு இல்லை. ஆனால் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கும் நிலையில், அந்த நாளில் ஏற்கனவே வெளியிட்டிருந்த அட்டவணைப்படியே தேர்வை நடத்திவிடலாமே என்று கல்வியாளர்களும், பெற்றோரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment