தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சேவையின் கீழ் வரும் உதவி கமிஷனர் பதவிகளிலும் (குரூப்-1பி), பள்ளிக்கல்வித் துறை சேவையின் கீழ் வரும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளிலும் (குரூப்-1சி) உள்ள காலி இடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நேற்று வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவியில் 21 இடங்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் 8 இடங்களுக்கும் என மொத்தம் 29 இடங்களுக்கு www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்கள் வாயிலாக ஆன்லைன் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் (மே) 22-ந்தேதி ஆகும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.
அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
முதல்நிலைத் தேர்வு 200 வினாக்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. முதன்மைத் தேர்வு 850 மதிப்பெண்களுக்கு 4 தாள்களாக நடத்தப்பட உள்ளது.
முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரையில், மேற்சொன்ன 2 பதவிகளுக்கும் பொதுவானதாக நடத்தப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.
No comments:
Post a Comment