பொது மாறுதல் கலந்தாய்வு:
ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
கலந்தாய்வுக்கான தேதி அட்டவணையும் மாறுகிறது
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கலந்தாய்வு அட்டவணையும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
பொது மாறுதல் கலந்தாய்வு
2024-25-ம் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.
கடந்த 13-ந் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது அதனை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அவகாசம் நீட்டிப்பு
கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் பலர் விண்ணப்பித்து இருப்பதை காண முடிகிறது. இடையில் எமிஸ் தளத்திலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, பொது மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வருகிற 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரிந்து வரும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கடைப்பிடிக்க தேவையில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை மாற்றம்
கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், கலந்தாய்வுக்கான அட்டவணையும் மாற்றம் செய்யப்பட உள்ளது. அந்தவகையில் கலந்தாய்வு நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே வெளியிட்டிருந்த அட்டவணையில் வருகிற 24-ந் தேதி கலந்தாய்வு தொடங்குவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பணி நிரவல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஒன்றிய அளவில் மட்டுமே இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment