‘நீட்' தேர்வு ‘ஹால் டிக்கெட்' வெளியீடு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
அதன்படி, இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 23 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுவதற்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.
விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது.
தேர்வை எழுத இருக்கும் தேர்வர்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்வு மையம் இடம்பெற உள்ள நகரத்தின் தகவல்கள் வெளியிடப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தேர்வு நடைபெறும் நகரம், மையம் உள்ளிட்ட விவரங்களுடன் ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டு இருக்கிறது.
தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தை அணுகி அறிந்து கொள்ளலாம் எனவும், சந்தேகம் இருந்தால் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் மற்றும் neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment