தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 6-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், 2 லட்சத்து 28 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன.
2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினார்கள்.
இதற்கிடையே அரசு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல், அந்தந்த கல்லூரிகளுக்கு இன்று அனுப்பிவைக்கப்படுகின்றன. கல்லூரிகள், தரவரிசை பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு தேதி தொடர்பான விவரங்களை 'வாட்ஸ் அப்' வாயிலாக தெரிவிக்க ஏற்பாடுகள் செய்துள்ளன.
முதல்கட்டமாக, நாளை (செவ்வாய்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் (ஜூன்) 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
No comments:
Post a Comment