எவ்வளவு நேரம் உட்கார - நிற்க வேண்டும்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 21, 2024

எவ்வளவு நேரம் உட்கார - நிற்க வேண்டும்?

இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் கணினி முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் நிலை இருக்கிறது. நவீன வாழ்க்கைமுறையும் அதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது. அப்படி உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

இதே நிலை தொடரும்போது இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றன. உட்காருவதற்கும், நிற்பதற்கும், உடற்பயிற்சிக்கும், தூங்குவதற்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். அதனை மையமாகக்கொண்டு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 40 முதல் 75 வயது வரை உள்ள 2 ஆயிரம் பேரின் தினசரி செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. உட்காருதல், நின்றல், உறங்குதல், உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் தினமும் எவ்வளவு நேரம் ஈடுபடுகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு ஒருவர் தினமும் எந்தெந்த செயல்களுக்கு எவ்வளவு நேரத்தை செலவிட வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். அதன்படி தினமும் 6 மணி நேரம் வரை உட்கார்ந்திருக்கலாம், 5 மணி 10 நிமிடங்கள் வரை நிற்கலாம். 

இரண்டு மணி நேரம் 10 நிமிடங்கள் வரை லேசானது முதல் மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம். அதேபோல் 2 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் வரை மிதமானது முதல் தீவிரமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். 8 மணி 20 நிமிடங்கள் வரை தூங்குவதற்கு ஒதுக்கலாம் என்று நேரத்தை வகைப்படுத்தி இருக்கிறார்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்காருவதற்கு அதிக நேரத்தை செலவிட்டதை மாற்றியமைத்து லேசான உடல் செயல்பாடுகளில் கூடுதல் நேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். அவர்களின் சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. வயது, ஒட்டுமொத்த உடல்நலம், உடல் திறன், வேலை மற்றும் தனிப்பட்ட விருப்பம் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனை பெற்று ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது நல்வாழ்வுக்கு வித்திடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

No comments:

Post a Comment