உடலில் வெப்பத்தை உண்டாக்கும் உணவுகள்
வெயில் சுட்டெரிக்கும் கோடை மாதங்களில், நம் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க நாம் உட்கொள்ளும் உணவுகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில உணவுகள் உடலில் வெப்பத்தை உருவாக்கும் தன்மையை கொண்டுள்ளன. அவை அசவுகரியத்திற்கும், உடல் உபாதைகளுக்கும், நோய் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கலாம். அத்தகைய உணவுகள் பற்றியும், அதனை தவிர்ப்பதற்கான காரணங்கள் குறித்தும் பார்ப்போம்.
* கோடை காலத்தில் காரமான உணவுகளை உட்கொள்வது உடல் வெப்பநிலையை உயர்த்தி, அதிக வியர்வையை உண்டாக்கும். அசவுகரியத்தையும் அதிகரிக்க செய்யும்.
* பொதுவாகவே வறுத்த உணவுகள் ஜீரணமாகுவதற்கு கடினமாக இருக்கும். அதனை கோடை காலத்தில் அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிடும்போது செரிமானமாவதற்கு உடல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த செயல்பாட்டின்போது அதிக வெப்பத்தையும் உருவாக்கிவிடும்.
* கோழி இறைச்சி, மீன் போன்ற புரத வகை உணவுகளுடன் ஒப்பிடும்போது சிவப்பு இறைச்சி வகை உணவுகள் செரிமானமாவதற்கு அதிக நேரம் தேவைப்படும். அதன் காரணமாக உடலின் உட்புற வெப்பநிலையும் அதிகரித்துவிடும்.
* மது உட்கொள்வது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். உடலின் வெப்பநிலையையும் அதிகரிக்க செய்துவிடும்.
* காபின் வகை பானங்களை பருகுவது நீரிழப்புக்கு வழிவகுத்துவிடும். உடலில் வெப்பத்தையும் தக்கவைத்துவிடும். அதனால் வெயில் அதிகம் நிலவும் சமயங்களில் காபி மட்டுமல்ல டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒரு கப் பிளாக் டீயில் 47 மி.கி. காபின் உள்ளது. ஒரு கப் காபியிலோ 95 மி.கி. காபின் இருக்கிறது. சோடாவில் 40 மி.கிராமும், டார்க் சாக்லெட்டில் 24 மி.கிராமும், உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் ‘எனர்ஜி டிரிங்’ பானத்தில் 85 மி.கிராமும் காபின் இருக்கிறது. எனவே கோடை காலங்களில் இத்தகைய உணவு பொருட்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது
.
* பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களையும் தவிர்த்துவிடுவது நல்லது. ஏனெனில் அதில் உடலின் இயற்கையான குளிரூட்டும் வழிமுறைகளை சீர்குலைக்கும் சேர்மங்கள் கலக்கப்பட்டிருக்கும். அவற்றை அதிகம் உட்கொள்வது வெப்பத்தோடு தொடர்புடைய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
* அதிக சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உடல் சூடாவதை உணரலாம். அசவுகரியத்தையும் அனுபவிக்க நேரிடும். எனவே உண்ணும் உணவில் உப்பு அதிகம் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும்.
* இனிப்பு வகை உணவுகள், இனிப்பு பானங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தும். வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பை உண்டாக்கும். உடலில் வெப்ப உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
* கோடை காலங்களில் சூடான சூப் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். அப்படி பருகுவது உடல் வெப்பநிலையை உயர்த்தும். சூப் ருசிக்க விரும்பும் பட்சத்தில் மிதமான சூட்டில் பருகுவது நல்லது. உணவுப்பதார்த்தங்களில் காரம் சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment