ரெயிலில் பயணிக்கும் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்கும் நடைமுறை இருக்கிறது. அவை வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும். பொதுவாகவே வெள்ளை நிறத்தில் சட்டென்று அழுக்கு படிந்துவிடும், கறை பட்டால் பளிச்சென்று தெரிந்துவிடும்.
அதனால் பலரும் வெள்ளை நிற உடைகளை விரும்ப மாட்டார்கள். வீட்டின் படுக்கை அறையில் கூட வெள்ளை நிற போர்வை, தலையணை உறை பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் ரெயிலில் தூங்கும் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வெள்ளை நிறத்தில் வழங்கப்படுவதற்கான காரணம் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா?
தூங்கும் வசதி கொண்ட ரெயில் பெட்டியில் பயணிக்கும் பயணிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தி படுக்கைவிரிப்புகள், தலையணை வாங்குகிறார்கள்.
குளிர்சாதன பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு ரெயில்வே தரப்பிலேயே கம்பளி போர்வை, பெட்ஷீட், தலையணை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அப்படி ஒவ்வொரு நாளும் பயணிகளுக்கு பல ஆயிரக்கணக்கில் போர்வை, தலையணை வழங்க வேண்டியிருக்கிறது. அவை ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிறகு சுத்தம் செய்வதற்காக சேகரிக்கப்படுகின்றன.
அதிலும் தூங்கும் வசதி கொண்ட ரெயில்பெட்டியில் பயணிப்பவர்களுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராவியை உருவாக்கும் பெரிய கொதிகலன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இவை சுமார் 30 நிமிடங்களுக்கு நீராவிக்கு உட்படுத்தப்படுகின்றன. அப்போது அதில் படிந்திருக்கும் கிருமிகள் நீக்கம் செய்யப்பட்டு சலவை மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை பிளிச்சிங் செய்வதும் சுலபமாகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க இத்தகைய கடுமையான சலவை முறை அவசியமாகிறது.
அதற்கு வெள்ளை நிற படுக்கை விரிப்புகளே பொருத்தமாக விளங்குகின்றன. ஏனெனில் இந்த துணி வகைகள் அதிக வெப்பநிலைக்கும், கடுமையான சலவை முறைக்கும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டவை. எத்தனை முறை சலவை செய்தாலும் எளிதில் மங்காது.
பிளீச்சிங் செய்தால் பொலிவுடன் காட்சி அளிக்கும். ஆனால் வண்ண நிற துணிகள் அப்படிப்பட்டவையல்ல. எளிதில் நிறம் மங்கி நாளடைவில் பொலிவு இல்லாமல் போய்விடும்.
இதற்கு மாறாக வெள்ளை படுக்கை விரிப்புகள் பிரகாசத்தை தக்கவைத்துக்கொள்கின்றன. எத்தனை முறை சலவை செய்து உலர்த்தினாலும் பளபளப்பான தோற்றத்தை கொடுக்கக்கூடியவை. அதுமட்டுமின்றி வெவ்வேறு நிற படுக்கை விரிப்புகளை பயன்படுத்தினால் அவற்றை ஒன்றாக சலவை செய்யும்போது அதில் இருக்கும் நிற சாயங்கள் ஒன்றாக கலக்க வாய்ப்புண்டு.
அதனால் ஒவ்வொரு நிற படுக்கை விரிப்புகளையும் தனித்தனியாக சலவை செய்ய வேண்டியிருக்கும். அதனால்தான் இந்திய ரெயில்வே வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்புகளையும், தலையணை உறையையும் தேர்வு செய்து வழங்குகிறது.
No comments:
Post a Comment