பொதுத்தேர்வு முடிவுகளும் பெற்றோரது கடமையும் | Public Examination Results and Parents' Duty - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, May 26, 2024

பொதுத்தேர்வு முடிவுகளும் பெற்றோரது கடமையும் | Public Examination Results and Parents' Duty

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. பத்திரிக்கைகளில் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியரின் தேர்ச்சி சதவிகிதம் மாநில வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் குறிப்பிடப்பட்டு செய்திகள் வெளிவந்தன. தந்தை இறந்த அன்றும் பிளஸ்-2 தேர்வு எழுதி 487 மதிப்பெண்கள் பெற்று மற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவியின் செய்தி ஒரு பக்கம். மதுரை மாணவி கோகிலா தந்தையை இழந்து, சுயநினைவற்ற தாயை பராமரித்த படி நான்கு பாடங்களில் சதம் பெற்று 600-க்கு 573 மதிப்பெண்கள் பெற்ற செய்தி என பலர் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள். இப்படி பல்வேறு நம்பிக்கையூட்டும் செய்திகளை படிக்கும் அதே சமயம் சில மாணவ-மாணவிகள் தோல்வி பயத்தில் அல்லது அவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத விரக்தியில் தவறான முடிவுகளை மேற்கொண்ட செய்திகளும் மிகுந்த வேதனையளிக்கிறது. 

மன அழுத்தம் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற மாணவர்கள் குறிப்பாக மாணவிகளில் சிலர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி தவறான முடிவுகளை எடுப்பது குறித்து செய்திகளும் வெளிவரத்தான் செய்கின்றன. 

இதற்கு யார் காரணம்?… பெற்றோர்களா?, சமூகமா? பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வந்தவுடன் எதிர்பார்த்ததைவிட குறைவாக தங்களது பிள்ளைகள் மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் பல பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி மயக்கமடைந்த நிகழ்வும் உண்டு. பிள்ளைகளுக்கு தைரியமும் நம்பிக்கையும் ஊட்ட வேண்டிய பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டி உள்ளது. பிள்ளைகளின் கல்வி குறித்து சரியான புரிதலின்றி அதிக எதிர்பார்ப்புகளை பெற்றோர்கள் வளர்த்துக்கொள்வதே இதற்கு காரணம். 

இதற்கான உளவியல் காரணிகள் என்ன? அவர்களது சுற்றமும், நட்பு வட்டமும் தான். அந்த பக்கத்துவீட்டு நண்பரின் மகள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளார். தனது தங்கையின் மகள் 3 சப்ஜெக்ட்டில் சென்டம் எடுத்து 198.80 கட்-ஆப் வைத்திருக்கிறாள். இதுபோன்று சக அழுத்தம் ஓடி வந்து இவர்களிடம் ஒட்டிக் கொள்கிறது. தமது நண்பர்களின் பிள்ளைகளோ அல்லது உறவினரின் பிள்ளைகளோ பொதுத்தேர்வு எழுதி இருந்தால் தேர்வு முடிவுகள் வந்தவுடன் போனை போட்டு என்னாச்சு? எவ்வளவு மார்க்? என்ன கட்-ஆப் வருது? இதுபோன்ற கேள்விகள் கேட்பதை நாம் தவிர்க்க வேண்டும். அவர்கள் மீது அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்வதற்காக கேட்பது நம் வழக்கம். இது ஆரோக்கியமான செயல் அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களாக சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும். நாமாக போன் போட்டு அவர்களது நிம்மதியை கெடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தை அவசியம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

பெற்றோரின் கடமை உங்கள் பிள்ளைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்த வருத்தத்தில் இருந்தால் நல்லவிதமாக நாலு வார்த்தைகளை கூறி பிள்ளைகளை ஆறுதல் படுத்த வேண்டும். அவர்கள் உங்கள் பிள்ளைகள். அவர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். அவர்களுக்கு இருப்பது ஒரு வாழ்க்கை அது வண்ணமயமாக இருக்க வேண்டும். உங்களது உற்சாகமான வார்த்தைகள் தான் அவர்களின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அவர்களை தயாராக்கும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். பொதுத்தேர்வில் பிரகாசிக்கத்தவறி பின்னாளில் உலகம் போற்றும் நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் நாலு பேரின் வெற்றிக் கதைகளை எடுத்துச் சொல்லுங்கள். பிளஸ்- 2 தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவன் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘பிளஸ்-2 பெயில்’ என்ற இந்தி திரைப்படம் இதற்கு ஒரு சாம்பிள். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடியாக துணை தேர்வு நடத்தப்படுகிறது. இதனை சீரிய முறையில் பயன்படுத்திக்கொண்டால் ஓராண்டு வீணாகாமல் தங்களது உயர் கல்வியை தடையின்றி தொடரலாம். திறமைகளை கண்டறியுங்கள் பெற்றோர்களே, உங்களது பிள்ளைகளின் தனித்திறன் என்ன என்பதை கண்டறியுங்கள். அவர்களது விருப்பத்தை கேட்டறியுங்கள். திட்டி தீர்ப்பதை விட்டுவிட்டு திடமான தீர்வுகளுக்கான வழியினை கண்டறியுங்கள். உங்கள் பிள்ளைகளில் சிலருக்கு ஓவியம் வரைதல் நன்கு வரும். சிலருக்கு விளையாட்டில் பங்கேற்பதில் ஆர்வம் இருக்கும். சிலருக்கு நுண்கலைகளில் ஆர்வமும் திறமையும் இருக்கும். இப்படி அவர்களுக்கு இருக்கும் ஆற்றலை அறிந்து அதன் வழி அவர்களை கொண்டு செல்லும் போது அவர்கள் நிச்சயம் வெற்றியாளர்களாக ஜொலிப்பார்கள். சி. மதுக்குமார், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, ராமநாதபுரம்.

No comments:

Post a Comment