தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு, சேலம் உள்பட 7 இடங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இதில், 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்சி.,-ஏ.ஹெச்.) பட்டப்படிப்பு உள்ளது. அதேபோல், சென்னை கோடுவளியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியும், ஓசூர் மத்திரிகிரியில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் உணவு, பால்வளம், கோழியின (பி.டெக்.,) தொழில்நுட்பம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்த நிலையில், பி.வி.எஸ்சி.,-ஏ.ஹெச்., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு வருகிற ஜூன் 3-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள், https://adm.tanuvas.ac.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்திய வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு விவரங்களை இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களையும் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வருகிற ஆகஸ்டு மாதமும், கலந்தாய்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் மாதம் கல்லூரி திறக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment