டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்குத் தயாரா..? TNPSC Are you ready for Group-4 exam? - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 8, 2024

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்குத் தயாரா..? TNPSC Are you ready for Group-4 exam?

தமிழகத்தில் அரசுப்பணிக்குச் செல்ல விரும்பும் இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற போட்டித் தேர்வுகளில் முதன்மையானதாக கருதப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த தேர்வானது தமிழக அரசுப்பணியில் காலியாக உள்ள சுமார் 6244 பணியிடங்களுக்காக நடைபெறுகிறது. குறிப்பாக இளநிலை உதவியாளர், வி.ஏ.ஓ, வனக்காவலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) தேர்வாணைய இணையபக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வினை எழுத உள்ள தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் சென்று தங்களது பயனர் குறியீட்டை பயன்படுத்தி தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்திருப்பீர்கள். இல்லையெனில் உடன் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

 தேர்வு நாள்-நேரம் தேர்வு நேரம் முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை. இதற்கென நேர அட்டவணையை தேர்வாணையம் நிர்ணயித்திருக்கிறது. அதன்படி காலை 8.30 மணிக்கு தேர்வுக் கூடத்திற்கு வருகை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. சலுகை நேரம் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டு காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வெழுத செல்லும் மாணவர்கள் சரியான நேரத்திற்குள் தேர்வு மையத்தை சென்றடையும் வகையில் தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையம் அமைந்துள்ள ஊர், இடம் குறித்த விவரங்களை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு பயணத்தை திட்டமிடுதல் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க உதவும். 

 தேர்வு தாள் விவரம் இத்தேர்வானது இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி-அ தமிழ் பகுதி. 100 வினாக்கள் கொண்டது. பகுதி-ஆ பொது அறிவு. 75 வினாக்கள் மற்றும் திறனறிவு + நுண்ணறிவு வினாக்கள் 25. இரண்டு பகுதிகளும் சேர்த்து மொத்தம் 200 வினாக்கள். மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும். ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண்கள். 200 வினாக்களுக்கும் சமமான மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் அனைத்து வினாக்களுக்கும் தவறாது விடையளிக்க வேண்டும். இத்தேர்வுத் தாள் கொள்குறி வகையிலானது. 

நேர மேலாண்மை இத்தேர்வில் கேட்கப்படும் 200 வினாக்களுக்கு 3 மணி நேரத்திற்குள் அதாவது 180 நிமிடங்களுக்குள் விடையளிக்க வேண்டும். அதாவது ஒரு வினாவிற்கு விடையளிக்க 1 நிமிடத்திற்கு குறைவான, சரியாக சொல்வதென்றால் ஒரு வினாவையும் அதற்கான விடைகளையும் படித்து பார்த்து சரியான விடையை விடைத்தாளில் குறிப்பதற்காக ஒரு தேர்வர் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் 90 வினாடிகளே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இத்தேர்வு தாளானது கொள்குறி வகையிலானது என்பதால் ஒவ்வொரு வினாவிற்கும் ஐந்து தெரிவுகள் A, B, C, D, E என்று வழங்கப்பட்டிருக்கும். அதனில் சரியான விடையை கண்டறிந்து விடைத்தாளில் (OMR Sheet) குறிக்க வேண்டும். எந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டுமோ அதற்கான வினா எண்ணிற்கு நேராக விடைத்தாளில் விடையினை குறிக்க வேண்டும். அவசரத்தில் அடுத்த வரிசையில் விடையளிக்கும் நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் கவனமாக செயல்பட வேண்டும். நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் வேகமாக விடையளித்து செல்லுதல் நேரத்தை மிச்சப்படுத்தும். 

விடையளிக்கும் யுக்தி மொத்தம் 200 வினாக்களை கொண்ட இத்தேர்வில் தமிழ் பகுதி, பொது அறிவு பகுதி ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள தெரிந்த வினாக்களுக்கு புரிந்து கொண்டு கவனத்தோடு விரைந்து விடையளிப்பதன் மூலம் நேரம் அதிகம் தேவைப்படும் திறனறிவு பகுதிக்கு நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். சில வினாக்களுக்கு சரியான பதிலை தெரிவு செய்வதில் குழப்பம் ஏற்படக்கூடும். அப்படியான சமயத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விடைகளில் தவறான விடைகளை முதலில் கண்டறிந்து ஒதுக்கிவிட்டு, சரியான விடையை கண்டறிய முயற்சிக்கலாம். சில வினாக்கள் குழப்பமாக இருந்தால் அதற்கு ஆங்கில வினாவில் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. எனவே, குழப்பமாக உள்ள வினாவிற்கு ஆங்கில வழியில் படித்து பார்த்து பதிலை தெரிவு செய்யலாம். சில தெரியாத வினாக்களுக்கான விடை வேறொரு வினாவில் விடையாக தென்படக்கூடும். எனவே, தெரியாத வினாக்களுக்கான விடைகளை இறுதியில் விடையளிப்பது நல்லது. தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவதில்லை என்பதால் அனைத்து வினாக்களுக்கும் தவறாது விடையளிக்க வேண்டும். அனைத்து வினாக்களுக்கும் விடையளித்த பின்பு விடைத்தாளில் 200 வினாக்களுக்கும் விடையளிக்கப்பட்டிருக்கிறதா.....? என்பதை அவசியம் சரிபார்க்க வேண்டும். 

தெரிந்த வினா-தவறான விடையளித்தல் பல தேர்வர்கள் நன்கு தெரிந்த வினாக்களுக்கு தவறான விடையளிப்பது வழக்கம். இது ஏன்.... எப்படி நிகழ்கிறது தெரியுமா...? கேட்கப்படும் வினாக்களில் சில வினாக்கள் தந்திரமாக அமைக்கப்பட்டிருக்கக்கூடும். வினாக்களை கவனமுடன் முழுவதுமாக படித்து புரிந்து கொண்டு பதிலை தேர்ந்தெடுத்து இம்மாதிரியானதவறுகளை தவிர்க்கலாம். உதாரணங்களை பார்ப்போம். 

உதாரணம்: 1 ‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை’ என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்’ என்பதற்கு எதிர்ச்சொல் (A)அகன்ற உலகம் (B)மேலான உலகம் (C)சிறிய உலகம் (D)கீழான உலகம் (E)விடை தெரியவில்லை இவ்வினாவில் ‘நனந்தலை உலகம்’ என்பதற்கு பொருள் ‘அகன்ற உலகம்’. ஆனால், இவ்வினாவில் சரியான பொருள் கேட்காமல் எதிர்ச்சொல் கேட்கப்பட்டுள்ளது. அதனால், ‘அகன்ற உலகம்’ என்பதற்கு எதிர்ச்சொல் ‘சிறிய உலகம்’. எனவே, வினாவை கவனமுடன் முழுவதுமாக படித்து புரிந்து கொண்டு பதிலை தேர்ந்தெடுக்க வேண்டும். 

 உதாரணம்: 2 அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது? (A) நெடுந்தொகை (B) திருக்குறள் (C) முத்தொள்ளாயிரம் (D) கம்பராமாயணம் (E) விடை தெரியவில்லை மேற்கண்ட வினாவில் விருப்பத் தேர்வாக நமக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நெடுந்தொகை மட்டும் அகநானூற்றின் வேறு பெயராகும். மற்ற மூன்று விடைகளும் அந்தந்த நூலின் இயல்பான பெயராக உள்ளது. எனவே, நாம் நெடுந்தொகையை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், சரியான விடை திரு என்று அடைமொழிப்பெயர் கொண்ட திருக்குறள் ஆகும். 

உடல் நலனில் கவனம் தேர்வுக்கு முந்தைய நாள், தேர்வு நாளன்று உட்கொள்ளும் உணவை கவனமாக எடுக்கவும். உணவினால் ஒவ்வாமை, வயிற்றுக்கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்வுக்கூடத்துக்குள் சென்றபின் தேவையான போது மட்டும் சிறிதளவு தண்ணீர் அருந்துதல் நல்லது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுதல் சிறுநீர் கழிக்க தூண்டக்கூடும். அது தேர்வரின் நேரத்தை பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

 பதற்றம் தவிர்க்கவும் பல தேர்வர்களுக்கு தேர்வுக்கூடத்துக்குள் நுழைந்ததும் இனம் புரியாத பயமும் பதற்றமும் வருவது இயல்பு. இதை சமாளிக்க மூச்சு பயிற்சி உதவும். தேர்வுக்கு முந்தைய நாள் படிப்பதை தவிர்த்துவிட்டு மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும், பிடித்த இசையினை கேட்கலாம். சீக்கிரம் தூங்க செல்லுதல் நல்ல உறக்கம் எடுத்துக் கொள்ளுதல், கண்களை மூடி சிறிது நேரம் தியானம் மேற்கொள்ளுதல் போன்றவை பதற்றத்தைத் தவிர்க்க உதவும். 

தன்னம்பிக்கை மந்திரம் இந்த தேர்வு எழுத சுமார் 20 லட்சத்து 50 ஆயிரம் லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் நமக்கு கிடைக்குமோ என்ற பயம் தேவையற்றது. போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிப்போரில் 90 சதவீதம் பேர் தங்களை இத்தேர்வுக்கு முழுமையாக தயார்படுத்திக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. இந்த தேர்வானது நமக்கானது. இந்த தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பணிக்கு செல்வேன் என்ற மன உறுதியோடு செல்லுங்கள். உங்கள் கடின உழைப்பு வெற்றியைத் தேடித்தரும் என்று உங்களை நீங்கள் நம்புங்கள். வெற்றி நிச்சயம். 

 செ.மதுக்குமார்,
 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 
 ராமநாதபுரம்.

No comments:

Post a Comment