சட்டசபை கூட்டத்தொடரில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
நோட்டு, புத்தகம் வழங்கிய அமைச்சர்கள்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
இதனையடுத்து முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சென்னை ஆலந்தூரில் உள்ள ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள். மேலும், மாணவர்களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்கு திட்டத்தையும், ஆதார் பதிவு முகாமையும் தொடங்கிவைத்தனர்.
புதிய அறிவிப்புகள்
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்க உள்ளது. அதில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் பள்ளிக்கல்வித்துறைக்கு இவ்வளவு அதிக ஒதுக்கீடு கிடையாது. அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புதிய திட்டங்கள் படிப்படியாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment