இந்தியாவின் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) முதுகலை பிரிவில் அறிவியல் துறையில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு குளிர்கால புத்துணர்ச்சி பள்ளியை தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முதுகலை பிரிவில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களில் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கு 50 மாணவர்கள் வீதம் 150 மாணவர்களை தேசிய அளவில் தேர்ந்தெடுத்து 18 நாட்கள் இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கி சிறந்த பயிற்சிகளை வழங்க உள்ளது.
திட்டத்தின் நோக்கம்
அறிவியல் மனப்பான்மை மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வளர்ப்பதற்காகவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதுகலைப் பட்டப்படிப்பிற்குப் பிறகு ஆராய்ச்சித் தொழிலைத் தொடர உந்துதலாக, திறமையான மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும். இந்தத் திட்டம், முதுகலை பட்டப்படிப்புக்குப் பிறகு மாணவர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகளை விளக்கமாக வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயிரியல்
உயிரியல் பாடப்பிரிவில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, பயிற்சி காலத்தில் நவீன உயிரியலின் அடிப்படைக் கருத்துகளை விளக்குவதுடன், அதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கவும் வழிகாட்டுவார்கள். பயிற்சியில் விரிவுரை அமர்வுகள், உயிரியல் ஆய்வகங்களின் பார்வை, ஆராய்ச்சி கருத்தரங்குகள் ஆகியவை அடங்கும்.
இயற்பியல்
இயற்பியல் பாடப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இயற்பியலின் அடிப்படைக் கருத்துகள், சிக்கலைத் தீர்க்கும் பயிற்சிகள் மூலம் சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்க வழிகாட்டுவார்கள். கூடுதலாக, இந்த துறையில் உள்ள அதிநவீன ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால ஆய்வுக்கான வருங்கால வழிகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவார்கள்.
வேதியியல்
வேதியியல் மாணவர்களுக்கு, கரிம, கனிம வேதியியல் ஆராய்ச்சிகளை செய்வதற்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.
2024-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த குளிர்கால பள்ளிக்கு ஜூலை15-ந் தேதி வரை மாணவர்கள் https://www.iisertvm.ac.in/ என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து பயனடையலாம். முதுகலை அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
-செ. மதுக்குமார்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,
ராமநாதபுரம்.
No comments:
Post a Comment