எஸ்.எஸ்.சி (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) மற்றும் ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் வங்கிப்பணியாளர் நடத்தும் தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆறுமாத கால இலவச உறைவிட பயிற்சி குறித்து கடந்த வாரம் பார்த்தோம். பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். விண்ணப்பிக்க நாளை (23.6.2024) கடைசி நாள்.
நுழைவுத் தேர்வு
எஸ்.எஸ்.சி மற்றும் ரெயில்வே தேர்வுகளுக்கான பயிற்சிக்கு தனி நுழைவுத் தேர்வும், வங்கிப் பணி தேர்வுகளுக்கான பயிற்சிக்கு தனி நுழைவுத் தேர்வும் நடத்தப்படும். இரண்டு தேர்வுகளும் ஒரு நாளில், அதாவது 14.7.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படும். எனவே, ஏதேனும் ஒரு பயிற்சி வகுப்புக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நுழைவுத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பிட்ட பிறகு, விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பயிற்சி வகுப்பிற்கு மாறுபட்டு வேறொரு பயிற்சி வகுப்பில் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே அனுமதி உண்டு. உதாரணமாக, எஸ்.எஸ்.சி மற்றும் ரெயில்வே பயிற்சிக்கு விண்ணப்பித்து விட்டு, பின்பு வங்கிப்பணிகளுக்கான பயிற்சிக்கு மாற்றம் செய்ய முடியாது. எனவே, எந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வது என்பதை அவசரப்படாமல், பொறுமையாக யோசித்து முடிவு செய்து விண்ணப்பிப்பது மிக மிக முக்கியம்.
நுழைவுத் தேர்வில் ஒரே மதிப்பெண்ணை ஒன்றிற்கு மேற்பட்ட மனுதாரர்கள் பெற்றால், வயதில் மூத்த மனுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையங்கள்
நுழைவுத் தேர்வு மையங்கள் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங் களிலும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்தின் பெயர் நுழைவுச் சீட்டில் (Hall Ticket) தெரிவிக்கப்படும்.
எஸ்.எஸ்.சி மற்றும் ரெயில்வே பயிற்சிக்கு 300 பேரும், வங்கிப்பணிக்கான பயிற்சி வகுப்புகளுக்கு 700 பேரும் தேர்வு செய்யப்படுவர். இனச்சுழற்சியின்படி, இட ஒதுக்கீடும் உள்ளது.
தேர்வுத்திட்டம்
எஸ்.எஸ்.சி மற்றும் ரெயில்வே தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்குரிய நுழைவுத் தேர்வு வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலும், 10-ம் வகுப்பு தரத்திலும் அமையும். ஒவ்வொரு வினாவிற்கும் இரண்டு மதிப்பெண்கள். நெகடிவ் மதிப்பெண் முறை உள்ளது. தவறாக விடையளிக்கும் ஒவ்வொரு வினாவிற்கும் 0.5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். வினாத்தாள் கொள்குறி வகையில் இருக்கும்.
வங்கிப் பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்குரிய நுழைவுத் தேர்வு வினாக்கள் பட்டப்படிப்பு தரத்தில் இருக்கும். இவையும் கொள்குறி பகுதிகளாகவே இருக்கும்.
எந்த புத்தகத்தை படிக்கலாம்?
புதியதாக இத்தேர்வுகளுக்கு படிப்பவர்கள், நுழைவுத் தேர்விற்கு எதைப் படிக்கலாம்? எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பம் வரலாம். நுழைவுத் தேர்வுக்கு மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. எனவே, புதிதாக இத்தேர்விற்கு படிப்பவர்கள் கணிதம் மற்றும் ரீசனிங் பகுதிகளுக்கு ஆர்.எஸ்.அகர்வால் எழுதியுள்ள ‘டெஸ்ட் ஆப் ரீசனிங்’ மற்றும் ‘குவான்டிட்டேட்டிவ் ஆப்டிடியூட்’ ஆகிய புத்தகங்களையும் படிக்கலாம்.
பொது அறிவுப் பகுதிக்கு ‘லூசன்ட் ஜென்ரல் நாலேட்ஜ்’ (Lucent’s General Knowledge) புத்தகத்தை படிக்கலாம். ரீசனிங் பகுதிக்கு அனாலஜி (Analogy), கிளாசிபிகேஷன் (Classification) மற்றும் சீரிஸ் (Series) ஆகிய மூன்று பகுதிகளை மட்டுமே முழுமையாக படிக்க நேரமிருக்கும். எனவே, இவற்றை படித்துவிட்டு எஸ்.எஸ்.சி. (SSC(MTS)) தேர்விற்கான முந்தைய வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினா, விடைகளை பயிற்சி செய்யுங்கள். மேலும், ஜெனரல் நாலேட்ஜ் டுடே, காம்பட்டீஷன் ரிபிரெஷ்சர், ரெனு ஜி.கே. (General Knowledge Today, Competition Refresher, Renu GK) ஆகியவற்றையும் படிக்கலாம்.
வங்கிப் பணிக்கான தேர்வுக்கு படிப்பவர்கள் பேங்கிங் சர்வீஸ் கிரானிக்கல் (Banking Services Chronicle) என்ற மாத இதழைப் படிக்கலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்றால் இந்தப் புத்தகங்களை படிக்கலாம். மேலும், பொருளாதாரம் மற்றும் வங்கிகள் குறித்த பகுதிக்கு ஆரிஹென்ட் (Arihant) நிறுவனத்தார் பேங்கிங் அண்ட் எகானமி அவர்னஸ் (Economy and Banking Awareness) போன்ற புத்தகத்தைப் படிக்கலாம்.
மாதிரி வினா விடை
மேலும், சென்னையிலுள்ள தமிழ்நாடு அண்ணா மேலாண்மை இன்ஸ்டிடியூட்டின் எய்ம் டி.என். (AIM TN) என்ற யூடியூப் சேனலில் எஸ்.எஸ்.சி. மற்றும் வங்கித் தேர்வுக்கான பாடக்குறிப்புகள், பயிற்சி வகுப்புகள் உள்ளன. இவற்றைப் பார்த்து பயன்பெறலாம். மேலும், பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வுக்கான 4 பாடப்பகுதிகளுக்குமான வகுப்புகள், வீடியோக்களாக உள்ளன. மேலும், அண்ணா மேலாண்மை இன்ஸ்டிடியூட்டின் ‘நோக்கம்' (Nokkam) என்ற செயலியினை உங்கள் மொபைல் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். மேலும், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து போட்டித் தேர்வுக்குமான பயிற்சி வகுப்புகளின் வீடியோக்கள், பாடக்குறிப்புகள் இலவசமாக கிடைக்கின்றன.
6 மாத காலம்
இப்பயிற்சி வகுப்பிற்கு ஆறு மாத காலமா?, தங்கியிருந்துதான் படிக்க வேண்டுமா?... போன்ற வினாக்கள் உங்களுக்குள் வரலாம். போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை கவனக்குவிப்பும் (Focus), தொடர் முயற்சியுமே அடிப்படை. எஸ்.எஸ்.சி. மற்றும் வங்கித் தேர்வுகள் மற்ற போட்டி தேர்வுகளிலிருந்து மாறுபட்டது. இதில் வேகம் (Speed), தெளிவு (Clarity of thought) மற்றும் துல்லியத்தன்மை (Accuracy) ஆகியவை மட்டுமே உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். ஏனெனில் அனைத்துப் பாடங்களையும் நீங்கள் படித்து விடலாம். கணிதத்தில் எந்தப் பகுதியில் இருந்து கேட்டாலும் விடையளித்து விடுவீர்கள். ரீசனிங் பகுதியில் சுமார் 80 சதவீத வினாக்களுக்கு விடையளித்து விடுவீர்கள். ஆனால், உங்களது வெற்றியை தீர்மானிக்கும் ஒரே கேள்வி ‘எவ்வளவு நேரத்தில்’ என்பதுதான். எனவேதான் இந்த 6 மாத கால உறைவிட பயிற்சி.
பெரும்பாலான இளைஞர்கள் போட்டித் தேர்வில் குறிப்பாக மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வில் வெற்றி பெறாமைக்கான காரணம் திறமையின்மையோ அல்லது கடுமையான உழைப்பின்மையோ அல்ல. குடும்ப சூழ்நிலை, பொருளாதாரக் காரணங்கள், போதுமான விழிப்புணர்வின்மை மற்றும் கிராமப்புற சூழல் ஆகிய காரணங்களால் மட்டுமே இத்தேர்வுகளுக்கு தயார் செய்வதில்லை. ஆனால் தற்போது இவை அனைத்திற்கும் தீர்வாக இப்பயிற்சி வகுப்பு கிடைத்துள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் கிராமிய வங்கிகளில் (Regional Rural Bank) மானேஜர் மற்றும் அஸிஸ்டெண்ட் பணிகளுக்கான 9995 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 27.6.2024. முதல் நிலைத் தேர்வு ஆகஸ்டு/செப்டம்பர் மாதங்களில் நடைபெறும்.
ஸ்டாப் செலக்சன் கமிஷன் 2024-ம் ஆண்டு தேர்வுதிட்ட அட்டவணையின்படி (Annual Calander Program) இந்த மாதம் பட்டதாரி கல்வித் தகுதியிலான காலியிடங்களுக்கும் (Combined Graduate Level Exam) 10-ம் வகுப்பு கல்வித் தகுதியிலான காலியிடங்களுக்கும் (Multi-TaskingStaff), ஸ்டெனோகிராபர் காலியிடங்களுக்கும் ஜூலை மாதமும், இந்தி மொழி பெயர்ப்பாளர் காலியிடங்களுக்கு ஆகஸ்டு மாதமும் மத்திய ஆயுதப்படையில் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியிலான கான்ஸ்டபிள் காலியிடங்களுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியிலும் வெளியிட உள்ளது. இதைத் தவிர மத்திய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது வெளியாகும் அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த ஆறு மாத காலத்தில் முழு கவனத்துடன் கடினமாக உழையுங்கள். இந்தியாவின் மற்ற எந்த ஒரு மாநில இளைஞர்களுக்கும் கிடைக்காத ஒரு வரமாய் தமிழக இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, நன்கு படித்து, அனைவரும் வெற்றி பெற்று மத்திய அரசுப் பணிகளில் சேர வாழ்த்துக்கள்.
எம். கருணாகரன், துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை.
எஸ்.எஸ்.சி - வங்கிப்பணி தேர்வு: தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சி முகாமில் இணைவது எப்படி? SSC - Banking Exam: How to Join Tamil Nadu Govt Free Training Camp?
No comments:
Post a Comment