410 பேருக்கு ஆசிரியர் பணி! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 20, 2024

410 பேருக்கு ஆசிரியர் பணி!

2018-ம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்த முடியாது என்று கூறி 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தகுதி தேர்வு மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு களை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

அரசாணை 

இந்நிலையில், ஆசிரியர் நியமனத்துக்கு ஏற்கனவே பின்பற்றி வந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் நியமனத்தேர்வில் பங்கேற்று, அதில் மெரிட் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2018-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின் அடிப் படையில், கடந்த 2023-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. அதேநேரம், 2013-ம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பணி நியமனம் கிடைக்காமல் 410 ஆசிரியர்கள் காத்திருந்தனர். 

நியமனத் தேர்வு 

இவர்களுக்கும் புதிய அரசாணைப்படி, நியமனத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பிரகாஷ் என்பவர் உள்பட ஏராளமானோர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை ஐகோர்ட்டு முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி) ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பணனும், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் என். கவிதா ராமேஷ்வரும் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- 

பணி வழங்கவேண்டும் 

2018-ம் ஆண்டுக்கு முன்பாக பின்பற்றப்பட்ட ஆசிரியர் நியமன நடைமுறையின்படி தகுதித்தேர்வி்ல் தேர்ச்சி பெற்ற மனுதாரர்கள் 410 பேருக்கும் தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் விரைந்து பணி வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழ்நாடு அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்துவது என கடந்த 2018-ம் ஆண்டுதான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால், 2018-ம் ஆண்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் அமல்படுத்த முடியும். அதற்கு முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையை கைவிட முடியாது. நியமனத் தேர்வை முந்தைய காலத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்த முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment