ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேரும்போது ‘மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்கக்கூடாது' - ஐகோர்ட்டு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 20, 2024

ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேரும்போது ‘மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்கக்கூடாது' - ஐகோர்ட்டு

ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழை சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்கக்கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா காலம் 

கொரோனா காலத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினர். அப்போது, கல்வி கட்டணம் முழுவதும் செலுத்தினால்தான் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று தனியார் பள்ளிகள் நிர்பந்தம் செய்தன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாற்றுச்சான்றிதழை வழங்க மறுக்கக்கூடாது. கல்வி கட்டணத்தை வழங்காமல் மாற்றுச்சான்றிதழ் வழங்கும்போது, அதை சான்றிதழில் குறிப்பிடலாம் என்று கூறியிருந்தார். 

 கட்டண பாக்கி 

 இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்தது. அதில், மாற்றுச்சான்றிதழில் கல்வி கட்டண பாக்கியை குறிப்பிடுவதால், அந்த மாணவனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தனர். அரசு தரப்பில் யு.எம்.ரவிச்சந்திரன், தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மூத்த வக்கீல் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 

கருவி இல்லை 

மாற்றுச்சான்றிதழ் என்பது மாணவர்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்றுச்சான்றிதழ் வழங்கும்போது, ‘கட்டண பாக்கி உள்ளது' என்றோ அல்லது ‘காலதாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ' குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது. மாற்றுச்சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்கான ஒரு ஆவணம். அது பெற்றோர்களிடம் இருந்து கல்வி கட்டண பாக்கியை வசூலிக்கும் கருவி அல்ல. கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி மாற்றுச்சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், இதுசம்பந்தமான விதிகளில் தமிழக அரசு 3 மாதங்களில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 

 பெற்றோரின் கடமை 

ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழை சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்கக்கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். மாற்றுச்சான்றிதழ்களில் கட்டண பாக்கி குறித்து குறிப்பிடும் தனியார் பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. அந்த கட்டண பாக்கியை வசூலிக்க தனியார் பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக மாற்றுச்சான்றிதழை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. 

பாதிப்பு 

மாணவர்கள் எந்த மனக்குறையும் இல்லாமல் கல்வி கற்க அனுமதிக்க வேண்டிய பள்ளிகள் கட்டண பாக்கிக்காக அவர்களை வகுப்புக்கு வெளியே நிற்கச்செய்வது, பலர் முன்னிலையில் எழுந்து நிற்க வைத்து மாணவர்களை மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்குவது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும். எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment