புத்தக வாசிப்பு... சாதாரண மனிதனையும், சாதனையாளனாக மாற்றும் சக்தி கொண்டது. அப்படிப்பட்ட வாசிப்பு பழக்கமானது இன்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்த ஆதங்கத்தை போக்கும் வகையில் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி சாதித்து காட்டி இருக்கிறார்கள், அரசுப்பள்ளி குழந்தைகள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொண்டைமான் விடுதி அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும், மாணவ-மாணவிகள் தொடர்ச்சியாக 6½ மணி நேரம் புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பதுடன், அதை சாதனை முயற்சியாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த முயற்சிக்கு அடித்தளமிட்டவர், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா. இவர், குழந்தைகளின் மத்தியில் புத்தக வாசிப்பை வளர்த்தெடுத்து, அதை இன்று எல்லோரும் பாராட்டும் விழிப்புணர்வு சாதனையாகவும் பதிவு செய்திருக்கிறார்.
‘‘எங்களது பள்ளியில் உள்ள நூலகத்தில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
இதில் புத்தக பூங்கொத்து என்ற பெயரில் அரசு வழங்கிய புத்தகங்களும் அடங்கும். அதில் படக்கதைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு, பூக்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை குறித்த புத்தகங்கள் உள்ளன.
எனவே எங்களது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வகுப்பறையில் தினமும் ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பை செயல்படுத்தி வருகிறோம். ஆரம்ப நாட்களில் அது அவர்களுக்கு சிரமமாக இருந்தாலும் இப்போது ஆசிரியர்களாக நாங்கள் சொல்வதற்கு முன்னதாக அவர்களே புத்தகங்களை வாசிக்க தொடங்கி விட்டனர்.
ஒரு விஷயத்தை 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் அதை நாம் மாற்ற முயன்றால்கூட அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது’’ என்றவர், இந்த பழக்கத்தை, மற்ற பள்ளிக்குழந்தைகளின் மனதிலும் விதைக்க முயன்றிருக்கிறார்.
‘‘புத்தக வாசிப்பின் மகத்துவத்தை மற்ற குழந்தைகளும் உணர வேண்டும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கும் வழங்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அதனால், புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றோம். குறிப்பாக, புத்தக வாசிப்பு திருவிழா வரவிருக்கும் சூழலில், அரசுப்பள்ளிகளில் அதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்தவேண்டும் என்ற நிலையில், நாங்கள் அதை புதுமையாக முன்னெடுத்தோம்.
அதன்படி, 44 பள்ளிக்குழந்தைகள், 2 ஆசிரியர்கள், பொதுமக்கள்... என 50-க்கும் மேற்பட்டோர், ஒரே இடத்தில் அமர்ந்து, புத்தகம் வாசிக்க தொடங்கினோம். காலை 10 மணிக்கு தொடங்கிய புத்தக வாசிப்பு, மாலை 4 30 மணி வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள், அவர்களுக்கு விருப்பமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசித்தனர். குழந்தைகள், கதை புத்தகங்கள், கவிதை புத்தகங்களை விரும்பி வாசித்தனர். மாணவ-மாணவிகள் சோர்வாகாமல் இருக்க, இடை இடையே தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டது. இப்படியாக, 6½ மணி நேரம் தொடர்ந்து புத்தகம் வாசித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெற்றி பெற செய்தோம்.
எங்களது முயற்சியை, ‘ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு’ நிறுவனம் புதுமுயற்சியாக கருதி, சாதனையாகவும் பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் பங்கேற்ற ஒவ்வொரு மாணவன்-மாணவிக்கும் சாதனைக்கான சான்றும், பதக்கமும் அணிவித்து பாராட்டியது’’ என்றவர், புத்தக வாசிப்பு எனும் விதையை விதைத்து வருகிறோம். அது விருட்சமாக மாறுவது, குழந்தைகளின் முயற்சியில்தான் இருக்கிறது என்றார்.
‘‘நாம் புத்தகம் வாசிப்பதோடு, மற்றவர்களையும் புத்தகம் வாசிக்க தூண்ட வேண்டும். நாங்கள் அந்த பணியை முன்னெடுக்க, குழந்தைகளும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வழியாக அந்த பணியை தொடருவார்கள் என நம்புகிறோம். புத்தகம் வாசிப்பு எனும் விதையை பள்ளி குழந்தைகளிடம் விதைத்தால்தான், நல்ல சமூகம் மலரும்’’ என்ற நம்பிக்கையுடன், மல்லிகா பேசி முடித்தார்.
No comments:
Post a Comment