காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியவை! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, July 23, 2024

காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியவை!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றுடன் இருக்கும்போது சில விஷயங்களை செய்வது அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கும், ஆரோக்கியமான வாழ்வியலுக்கும் வித்திடும். அத்தகைய பழக்கங்கள் குறித்து பார்ப்போம். 
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து அன்றைய நாளை தொடங்குங்கள். இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். அத்துடன் இரவு தூக்கத்திற்கு பிறகு உடலில் ஏற்பட்டிருக்கும் நீரிழப்பை ஈடு செய்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். 

மனதை தெளிவுபடுத்தவும், அன்றைய நாளை தொடங்குவதற்கான நேர்மறையான எண்ண ஓட்டங்களை கட்டமைக்கவும் தியானத்தில் சில நிமிடங்கள் செலவிடுங்கள். தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனத் தெளிவை அதிகரிக்கவும் உதவும். 

யோகா, விறுவிறுப்பான நடைப்பயிற்சி, கை-கால்களை நீட்டி, மடக்கி மேற்கொள்ளும் பயிற்சிகள் போன்ற லேசான உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். அவை உடல் ஆற்றல் திறனை அதிகரிக்கச் செய்யும். அதேவேளையில் வெற்று வயிற்றில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் பயிற்சி முறை அமைய வேண்டும். 

மூளை மற்றும் உடலுக்குள் பயணிக்கும் ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்க ஆழமான சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதிக விழிப்புணர்வுடனும், கவனச்சிதறல் இன்றியும் செயல்பட இந்த பயிற்சி உதவும். 

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றுடன் இருக்கும்போது அன்றைய நாளைத் திட்டமிட சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். முன்னுரிமை கொடுக்க வேண்டிய பணிகளை பட்டியலிட்டு அதற்கேற்ப செயல்பட திட்டமிடுங்கள். உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிக்கவும் இது உதவும். 

காலையில் குளிர்ந்த நீரில் குளியுங்கள். அது உடலை உற்சாகப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மனநிலையை அதிகரிக்கவும் உதவும். தூங்கி எழுந்ததும் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற இந்த குளியல் சிறந்த வழிமுறையாக அமையும். 

வாழ்வில் நிகழ்ந்த சிறந்த நினைவுகளை அசைபோட்டு பார்ப்பதற்கு சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அத்தகைய நினைவு களை எழுதவும் செய்யலாம். பிறர் செய்த மறக்கமுடியாத உதவிகளை நினைத்து பார்த்து நன்றி தெரிவிக்கலாம். நன்றி உணர்வைக் கடைப்பிடிப்பது மனநிலையை மேம்படுத்தி, அன்றைய நாளை நேர்மறையான எண்ணங்களுடன் தொடங்கச் செய்யும். 

காலை வேளையில் மரங்கள், செடி-கொடிகள் உள்ள பகுதிக்கு சென்று சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். பால்கனியில் செடிகள் வளர்த்தால் அதன் அருகில் அமர்ந்து சில நிமிடங்களை செலவிடலாம். புதிய காற்று மனதையும், உடலையும் புத்துணர்ச்சியடையச் செய்யும். விழிப்புடனும் செயல்பட வைக்கும்.

No comments:

Post a Comment