‘எமிஸ்' தள பணிகள் ஆய்வக உதவியாளர்களிடம் ஒப்படைப்பு கல்வித்துறை தகவல்
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், விவரங்கள் ஆகியவை கல்வி மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ‘எமிஸ்' தளத்தில் பதிவுகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.
இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். அமைச்சர், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது.
அதில் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதாக அவர் அளித்த உத்தரவின்பேரில், தற்போது ஆசிரியர்களுக்கான சுமை குறைக்கப்பட்டு உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பயிற்றுவிப்பாளர் மற்றும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு எமிஸ் தளம் உள்ளிட்ட பதிவுகள் மேற்கொள்ளும் பணி ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் வருகைப் பதிவு, பெற்றோர் எண் சரிபார்ப்பு, ஆதார், தபால், வங்கி அலுவலக கணக்கு பதிவு, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட 20 வகையான பதிவுகளை இவர்கள் மேற்கொள்ள இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment