முதல்-அமைச்சரின் கனவு திட்டம்
தமிழக முதல்-அமைச்சரின் மு க ஸ்டாலினின் கனவு திட்டங்களில் ஒன்றாக ‘நான் முதல்வன்' திட்டம் திகழ்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி அன்று முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினின் பிறந்தநாளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் கையாள்கிறது.
தமிழ்நாட்டு மாணவர் ஒருவர், உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட தரமும், தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதை காட்டுவதே இந்த திட்டத்தின் தாரக மந்திரம் ஆகும். அதன்படி கல்லூரி மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு பயிற்சியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்கான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இணைப்பு பாலம்
வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் இந்த திட்டம் இணைப்பு பாலமாக இருக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 25 லட்சம் இளைஞர்கள் பயன் அடைந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தொடர்ந்து வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதியுடன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராமப்புற மாணவர்களுக்கும் உயர் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘சிகரம் தொடு' என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதன் மூலம் கலை, அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1,000 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு சரளமாக ஆங்கில பேசும் பயிற்சி, நேர்முக தேர்வுகளை துணிச்சலாக எதிர்கொள்ளுதல் உள்பட பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு (2025) உயர் கல்வியை முடித்து வெளியே வரும் கிராமப்புற மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன் பெற உள்ளனர்.
நிர்வாக இயக்குனர் தகவல்
இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “சிகரம் தொடு' திட்டத்தில் சேருவதற்கு கிராமப்புற மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தகுதியான 1,000 மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ‘சிகரம் தொடு' திட்டத்தின் கீழ் உயர் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்' என்றார்.
‘நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டம் மட்டுமல்ல, நமது இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் திட்டம்' என்று முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி வரும் வேளையில், இந்த திட்டத்துக்கு மேலும் ஒரு மகுடமாக ‘சிகரம் தொடு' திட்டம் அமைய உள்ளது.
No comments:
Post a Comment