முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட திறன்மிகு வகுப்பறைகள் 22 ஆயிரத்து 931 பள்ளிகளுக்கு ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
திறன்மிகு வகுப்பறைகள்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகள் இருக்க வேண்டும். மாணவர்களின் கற்றலில் எந்த தடைகளும் இருக்கக் கூடாது என்ற முயற்சியில் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தற்போதைய தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு பள்ளிகளில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பையும் மேம்படுத்துகிறது.
அந்தவகையில் புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் வாயிலாக நடந்த கற்றல்-கற்பித்தல், உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவை வாயிலாக நடக்கிறது. இதனை தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க திறன்மிகு வகுப்பறைகள் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஓரிரு மாதங்களில்...
அதன்படி, 22 ஆயிரத்து 931 அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.455 கோடியே 32 லட்சம் மதிப்பில் திறன்மிகு வகுப்பறைகள் தொடங்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதில் முதற்கட்டமாக அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் 493 அரசு தொடக்க பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி தொடங்கியும் வைக்கப்பட்டது.
மீதமுள்ள பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் எப்போது தொடங்கப்படும்? என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘22 ஆயிரத்து 931 அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திறன்மிகு வகுப்பறைகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் 11 லட்சத்து 76 ஆயிரத்து 452 மாணவ-மாணவிகள் பயன் அடைய உள்ளனர். முதற்கட்டமாக 634 பள்ளிகளில் தொடங்கப்பட்டது. மீதமுள்ள பள்ளிகளில் அதற்கான கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் இந்த வகுப்பறைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த வகுப்பறைகள் வாயிலாக கற்றல் திறன்கள், கற்றல் விளைவுகளை அடையும் திறன்கள் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்றனர்.
No comments:
Post a Comment