"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை!
‘கூட்டுறவு' செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம். இதற்காக தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
‘கூட்டுறவு’ செயலி
தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கூட்டுறவுத்துறை வழங்கும் அனைத்து சேவைகளையும் மக்கள் எளிதாக பெற இயலும். அதன்படி, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய 'கூட்டுறவு' என்ற செயலியை கூட்டுறவுத்துறை அறிமுகப்படுத்தியது.
ரூ.75 லட்சம் வீட்டுக்கடன்
இந்த 'கூட்டுறவு' செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதுடன் கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடவும் முடியும். இந்த செயலியில் பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், கடன் விண்ணப்பம், இ-வாடகை, வங்கி சேவை, உங்கள் சங்கம், இ-சேவை, மருந்தகம், கிடங்கு, நியாயவிலைக் கடை, தொடர்புக்கு, அலுவலகம் என்ற தலைப்புகளில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் 'கூட்டுறவு' செயலி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணைய வழியில் சென்றடைகிறது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், இந்த ‘கூட்டுறவு' செயலி மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி வீதம் 8.5 சதவீதமாக இருப்பதுடன் இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment