ஆலோசனை கூட்டம்
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடனும், அதனைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர்களுடனும் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வி செயலாளர் சோ.மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் சங்கர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் டாக்டர் மா.ஆர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம். மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இருக்கக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மழைக்காலம் தொடங்குவதற்குள் இடிக்கக்கூடிய பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம்.
நம்பிக்கை வரும்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியிருக்கிறோம். பத்திரிகைகளில் வரும் செய்தியை அடிப்படையாக வைத்தும் முதன்மை கல்வி அலுவலர்களிடம் சில விஷயங்கள் பேசப்பட்டது. என்.சி.சி. முகாம் விவகாரம் தொடர்பாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் பேசியிருக்கிறோம்.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக வரும் புகார்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் இதுபோன்ற தவறுகள் நடந்தால் மூடி மறைக்கக்கூடாது. அதனை உடனடியாக வெளிக்கொண்டு வந்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தனியார் பள்ளிகள் மட்டுமல்லாது, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். இப்படி செய்வதால் பள்ளிகள் மீது கெட்டப்பெயர் வராது.
தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்ற பெயரும், நம்பிக்கையும் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாடத்திட்டங்கள் மாற்றப்படுகிறதா?
அதனைத் தொடர்ந்து அவரிடம் பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டம் மாற்றப்படுகிறதா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அது போன்ற எண்ணம் எதுவும் தற்போது இல்லை' என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் தினத்தையொட்டி, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் பரிசுப் பதிப்புகளாக கொண்டுவரப்பட்டுள்ள மிளிரும் தமிழ்நாடு என்ற தலைப்பின் கீழ் ‘சென்னை டு மெட்ராஸ்' என்ற புகைப்பட ஓவிய நூலினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
No comments:
Post a Comment