உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய இரு பாதிப்புக்கும் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள் உணவு விஷயத்திலும், உடலுக்கு நன்மை சேர்க்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உட்கொள்ளும் விஷயத்திலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை எதிர்வினை புரிந்து நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடலாம். அத்தகைய பொருட்கள் இவை..
சோடியம் - மாத்திரைகள்
சோடியம் ரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடியது. சோடியம் அதிகம் கலந்திருக்கும் உப்பை உணவில் குறைத்துக்கொண்டால் மட்டும் போதாது. சோடியம் அதிகம் உள்ளடங்கி இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் சூப்கள், கெட்சப்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உள்ளிட்டவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அத்துடன் வேறு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் சோடியம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டவையாக இருக்கக்கூடாது. அதனால் முன்கூட்டியே மருத்துவரிடம் நீரிழிவு, ரத்த அழுத்தம் இருக்கும் விஷயத்தை கூறிவிட வேண்டும். ஏனெனில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் சோடியம் நிறைந்துள்ளன.
அதிமதுரம்
நீரிழிவு, ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளானவர்கள் அதிமதுரத்தை மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.
உடலில் தேவைக்கு அதிகமாக திரவத்தை தக்கவைத்து கை, கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் பாதகத்தை உண்டாக்கிவிடும்.
கால்சியம்
கால்சியம் சேர்க்கப்பட்ட மருந்து, மாத்திரைகளை அதிகம் உட்கொள்வது இதய நோயுடன் தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும். நிறைய மருந்துகளில் கால்சியம் சேர்க்கப்படுவதால் மருத்துவரின் வழிகாட்டுதலோடு அதனை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி
உடலுக்கு வைட்டமின் டி முக்கியமானது என்றாலும், அதிகம் உட்கொள்வது ரத்தத்தில் கால்சியத்தை உருவாக்கலாம். அதன் காரணமாக இதயம் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் வேறு எந்த நோய்க்கு மருந்து உட்கொள்வதாக இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உட்கொள்வது அவசியமானது.
காபின்
காபின் ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல இதய துடிப்பையும் அதிகரிக்கச் செய்துவிடும். உடல் எடையை குறைப்பதற்கோ, உடலில் ஆற்றலை தக்கவைப்பதற்கோ பரிந்துரைக்கப்படும் சில மாத்திரைகளில் காபின் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதனால் காபின் கலந்த மாத்திரைகளை உட்கொள்கிறீர்களா? என்பதை பரிசோதித்துக்கொள்வது நல்லது. காபி பருகுவதையும் தவிர்ப்பது அவசியமானது.
No comments:
Post a Comment