கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு
கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி தொடங்குகிறது.
கால்நடை மருத்துவ படிப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு, சேலம் உள்பட 7 இடங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்சி.,-ஏ.ஹெச்.) பட்டப்படிப்பு உள்ளது. இதில், 597 பி.வி.எஸ்.சி.-ஏ.ஹெச் படிப்புக்கான இடங்கள் உள்ளன.
அதேபோல், கோடுவளியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரி உணவு தொழில்நுட்ப படிப்பில் (பி.டெக்) 34 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் (பி.டெக்) 17 இடங்களும் உள்ளன. மேலும், ஒசூர் மத்திரிகிரியில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பி.டெக் பட்டப்படிப்பில் 40 இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டது.
செப்டம்பர் 4-ல் கலந்தாய்வு
இந்த நிலையில், கால்நடை மருத்துவம் சார்ந்த பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச்., பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4-ந் தேதியும், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு செப்டம்பர் 5-ந் தேதி நேரடி முறையில் சென்னை வேப்பேரில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பி.டெக் கலந்தாய்வு மட்டும் நேரடி முறையில் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரியில் செப்டம்பர் 6-ந் தேதி நடக்கிறது. பி.வி.எஸ்.சி.-ஏ.ஹெச் படிப்புக்கான கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற இருக்கிறது.
ஆன்லைன் கலந்தாய்வில், மாணவர்கள் தங்களின் விருப்ப கல்லூரிகளை செப்டம்பர் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை பதிவு செய்யலாம். சேர்க்கை ஒதுக்கீடு கடிதம் செப்டம்பர் 11-ந் தேதி மாணவர்களுக்கு வெளியாகும். மாணவர்கள் மேலும் விவரங்களுக்கு, பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment