தூங்குவதற்கு முன்பு முப்பது நிமிடங்கள் நடந்தால்...! - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, September 15, 2024

தூங்குவதற்கு முன்பு முப்பது நிமிடங்கள் நடந்தால்...!

எளிமையான உடற்பயிற்சியை விரும்புபவர்களின் தேர்வாக அமைவது, நடைப்பயிற்சி. பெரும்பாலும் காலை வேளையில்தான் பலரும் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். அதேபோல் இரவு தூங்க செல்வதற்கு முன்பு 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வரலாம். அந்த பயிற்சியும் ஏராளமான நன்மைகளை பெற்றுத்தரும். அவை என்னவென்று பார்ப்போமா? 
ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும் இரவில் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் முக்கியமான நன்மை ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதுதான். இரவில் நடைப்பயிற்சி மற்றும் மிதமான உடற்பயிற்சி செய்வது தூக்கத்திற்கு உதவும் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதி செய்துள்ளன. இரவு நேர நடைப்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கவும், ஓய்வெடுக்கவும், ஆழமான தூக்கத்தை பெறவும் உதவும். 

உடல் எடையை குறைக்கும் இரவில் 30 நிமிடங்கள் நடப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதோடு தூக்கத்தின்போதும் கலோரிகளை எரிக்கும் அளவை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவி புரியும். இரவு நேரத்தில் அடிக்கடி நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை நிர்வகிக்கவும், உடல் எடை அதிகரிக்க செய்யும் இரவு நேர ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும் உதவும். 

மன ஆரோக்கியத்திற்கு உதவிடும் மாலை நேர அல்லது இரவு நேர நடைப்பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் நல்லது. மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை குறைக்க நடைப்பயிற்சி உதவும். இரவில் நடப்பது எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட உதவும். அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டு பார்க்க மனதுக்கும் நேரம் கொடுக்கும். மனதை தெளிவுடன் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். 

செரிமானத்தை மேம்படுத்தும் இரவு உணவு உண்ட பிறகு சிலருக்கு அஜீரணக்கோளாறு ஏற்படும். அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்ட ஒரு ஆய்வில், ‘சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் உலா வருவது செரிமானத்திற்கு உதவும். அசிடிட்டி, அஜீரணம் போன்ற அசவுகரியங்கள் ஏற்படாமல் தடுக்கலாம். இரவு நேர உலாவும் கூட நமது செரிமான அமைப்புகளின் செயல்பாடுகளை மென்மையாக்குகிறது. குமட்டல், வயிறு உப்புசம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்காமல் தூங்குவதற்கு உதவுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

நடக்கும்போது பின்பற்ற வேண்டியவை: 
சிறிது நேரம் மெதுவாகவோ, பின்பு வேகமாகவோ நடக்கக்கூடாது. சீரான வேகத்தை பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் இதயத்துடிப்பை மெதுவாக உயர்த்தும் அளவுக்காவது விறுவிறுப்பாக நடக்க வேண்டும். 
பூங்கா அல்லது அமைதியான சுற்றுப்புறம் கொண்ட இடத்தை நடைப்பயிற்சிக்கு தேர்வு செய்யவும். இது ரிலாக்ஸாக நடப்பதற்கும், நடைப்பயணத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். நடைப்பயணத்திற்குப் பிறகு, தசைகளின் இயக்கத்தை சீராக்கவும், நன்றாக ஓய்வெடுக்கவும் இது உதவும்.

No comments:

Post a Comment