❇️சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் கலைத்திருவிழா போட்டிகளில் வாய்ப்பு வழங்க கல்வித்துறை உத்தரவு!
📍அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ-மாணவிகள் தங்களுடைய முழுத்திறனை வெளிப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த போட்டிகள் விரிவுப்படுத்தப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்க முடியாத சூழல் இருப்பதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன.
📍இதனை அறிந்து கல்வித் துறை, அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
📍2024-25-ம் ஆண்டுக்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பள்ளி அளவில் போட்டிகள் நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு சார்ந்து மாவட்டங்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்ததை தொடர்ந்து, பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றியாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்வதற்கு வருகிற 27-ந்தேதி வரை நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
📍இந்த போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் (சிறப்பு பள்ளிகள் உள்பட) அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும். இந்த விவரத்தினை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் (சிறப்பு பள்ளிகள் உள்பட) தெரிவித்து மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment