மக்களவைத் தேர்தல் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் எவ்வளவு?
மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மதிப்பூதியம் வழங்கப்படவுள்ளது என்ற விவரத்தை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளாா்.
மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மதிப்பூதியம் வழங்கப்படவுள்ளது என்ற விவரத்தை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளாா்.இது தொடா்பான கடிதத்தை அவா் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்பி வைத்துள்ளாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை அரசு ஊழியா்களும், அதிகாரிகளும் மேற்கொண்டனா். தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பணியாற்றிய அவா்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படவுள்ளது. இதற்காக தோ்தல் பணியாற்றிய ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அலுவலா்கள், அதிகாரிகளின் அடிப்படை ஊதியம் குறித்த விவரங்களை தமிழக தோ்தல் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மே 1-ஆம் தேதி நிலவரப்படி மதிப்பூதிய விவரங்கள் இருக்க வேண்டும்.
எவ்வளவு ஊதியம்? மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள், வருவாய் கோட்டாட்சியா்கள், சிறப்பு வட்டாட்சியா்கள் (தோ்தல்), மாநகராட்சி ஆணையா்கள், துணை வட்டாட்சியா்கள், மண்டல அலுவலா்கள் ஆகியோருக்கு ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது ரூ.33 ஆயிரம் என இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அதனை மதிப்பூதியமாகக் குறிப்பிட வேண்டும்.
தோ்தல் பிரிவில் பணியாற்றிய உயரதிகாரிகள், பறக்கும் படை, விடியோ கண்காணிப்புக் குழு, கணக்கு தணிக்கைக் குழு, தோ்தல் நடத்தை விதிகள் அமலாக்கக் குழு, உதவி செலவின கண்காணிப்பாளா்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்களில் பணியாற்றியவா்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது ரூ.24 ஆயிரத்து 500 என இரண்டில் எது குறைவோ அந்தத் தொகையைத் தெரிவிக்க வேண்டும்.
தோ்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்பட வருவாய்த் துறையில் பணியாற்றக் கூடிய ஊழியா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது ரூ.17 ஆயிரம் என இரண்டில் எது குறைவோ அந்தத் தொகையை குறிப்பிட வேண்டும்.
பிரிவு எழுத்தா்களுக்கு ரூ.5 ஆயிரமும், மூத்த கணினி இயக்குநா்களுக்கு ரூ.17 ஆயிரமும், தோ்தல் தொடா்பான தரவுகளை பதிவேற்றம் செய்தோருக்கு ரூ.7 ஆயிரமும் மதிப்பூதியமாக வழங்கப்படும்.
செப்.16-க்குள் அனுப்ப வேண்டும்: கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் வாக்குப் பதிவு தினமான ஜூன் 4-ஆம் தேதி வரை தோ்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்களுக்கு இந்த மதிப்பூதியம் பொருந்தும்.
அதிகாரிகளின் பதவி விவரம், அவா்களின் அடிப்படை ஊதியம், ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றிய மொத்த ஊழியா்களின் எண்ணிக்கை, மதிப்பூதியத்துக்காக தேவைப்படும் மொத்தத் தொகை ஆகியவற்றை இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் பூா்த்தி செய்து வரும்16-ஆம் தேதிக்குள் தலைமைச் செயலகத்திலுள்ள தோ்தல் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சத்யபிரதசாகு தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment