குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்து முக்கியமானது. பழங்கள், காய்கறிகளை விட இறைச்சி வகைகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. எனவே அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை சாப்பிட சிறு வயதிலேயே தங்கள் குழந்தைகளை பழக்கிவிட வேண்டும். 9 மாதத்திற்கு பிறகு அசைவ உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்தலாம்.
முட்டை
முதலில் முட்டையை சாப்பிட பழக்க வேண்டும். அதில் புரதம் மட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்கள் உள்பட குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது முட்டையில் புரதச்சத்து குறைவாக இருந்தாலும் அது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கும். முதலில் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைக்கு சாப்பிட பழக்க வேண்டும். அதனை உட்கொள்ள தொடங்கியதும் வெள்ளைக் கருவை கொடுக்கலாம்.
கோழி இறைச்சி
ஒரு வயதை எட்டிய பிறகு மீன், கோழி போன்ற இறைச்சிகளை சாப்பிட கொடுக்கலாம். ஆரம்பத்தில் கோழி இறைச்சியை குழம்பாகவோ, சூப்பாகவோ கொடுக்க வேண்டும். அதன்பிறகு இறைச்சி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டும்.
மீன்
சால்மன், மத்தி, டூனா போன்ற மீன் வகைகளை வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்கலாம். எனினும் அளவுக்கு அதிகமாக கொடுத்துவிடக்கூடாது. குறிப்பாக நாம் சாப்பிடும் அளவில் நான்கில் ஒரு பகுதி இறைச்சியையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் செரிமான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி உள்ளிட்டவைகளை 5 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவைகளில் அதிக புரதம் இருந்தாலும் செரிமான மண்டலத்திற்கு சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
No comments:
Post a Comment